முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி 5 ஆண்டுகளை நிறைவு செய்யும் நிலையில், சட்டப்பேரவையில் நேற்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பாஜக கைவிட்ட நிலையில், பன்னீர்செல்வம் திமுகவுடன் நெருக்கம் காட்ட தொடங்கி இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தின் 16-வது சட்டப்பேரவையின் கடைசி நாளான நேற்று இடைக்கால பட்ஜெட் மீதான பொது விவாதத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரை வழங்கினார். வேளாண் இடைக்கால பட்ஜெட் மீதான பொது விவாதத்துக்கு எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதிலுரை வழங்கினார். தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினும் உரையாற்றினார். இந்நிகழ்வை அதிமுக, பாஜக, பாமக (அன்புமணி) எம்எல்ஏ.க்கள் புறக்கணித்தனர்.
அதே நேரத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர் ஐயப்பன் ஆகியோர் பேரவை நிகழ்வில் பங்கேற்றனர். ஒவ்வொரு கட்சி சார்பில் தலா ஒரு எம்எல்ஏ திமுக அரசின் 5 ஆண்டு ஆட்சி, முதல்வர், பேரவைத் தலைவர் செயல்பாடுகளை பாராட்டி பேசினர்.
அப்போது பேசிய பன்னீர்செல்வம் ஆதரவாளர் ஐயப்பன், "பள்ளி செல்லும் குழந்தைகளுக்காக முதல்வர் கொண்டுவந்த காலை உணவு திட்டம்
அருமையான திட்டம். குழந்தைகளுக்கு தாயாக இருந்து காலையில் சுடச்சுட உணவை வழங்குகிறார் முதல்வர். நடைபெற இருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றிபெற்று எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஆசியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தமிழக முதல்வராக வருவார்" என பேசினார். அவரின் இந்த பேச்சால் பேரவையில் இருந்த திமுக உள்ளிட்ட பிற கட்சி எம்எல்ஏக்களும் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். முதல்வர் ஸ்டாலினும் புன்முறுவலுடன் சிரித்தபடியே ஐயப்பனின் பேச்சை ரசித்தார்.
இதனிடையே, முதல்வர் ஸ்டாலின் உரையை முடித்ததும், பேரவையை விட்டு வெளியில் வந்தபோது, பன்னீர்செல்வம் முதல்வரை சந்தித்து பூங்கொத்து கொடுத்தார். இதையடுத்து மீண்டும் சட்டபேரவை நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிந்து பேரவை ஒத்திவைக்கப்பட்ட பின்னரும், 2-வது முறையாக முதல்வரை பன்னீர்செல்வம் சந்தித்தார்.
பின்னர் இது தொடர்பாக, பேரவையில் ஐயப்பன் எம்எல்ஏ பேச்சு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த பன்னீர்செல்வம், "திமுக ஆட்சி சிறப்பாக நிறைவுபெற்றதன் காரணமாக முதல்வரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். தமிழக மக்கள் என்ன நினைக்கிறார்களோ அதைத் தான் ஐயப்பன் சொன்னார். இன்றைய அரசியல் சூழ்நிலை, 5 ஆண்டுகால ஆட்சியின் நிலை, நாட்டுக்கு செய்த சாதனை மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளன. மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பு திமுகவுக்கு உள்ளது" என்றார்.
பன்னீர்செல்வம் பாஜகவை முழுமையாக நம்பினார். எப்படியும் அதிமுகவில் இணைந்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஆனால் பாஜக, பழனிசாமியுடன் கூட்டணி வைத்து, பன்னீர்செல்வத்தை கைவிட்டதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். தேர்தல் தேதி நெருங்க நெருங்க, பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன், ஆர்.வைத்திலிங்கம் திமுகவுக்கு சென்றனர். கு.ப.கிருஷ்ணன், ஜேசிடி பிரபாகரன் ஆகியோர் தவெகவுக்கு சென்றனர். தர்மர் எம்.பி, பழனிசாமியுடன் சேர்ந்துவிட்டார்.
பண்ருட்டி ராமச்சந்திரனும், பன்னீர்செல்வம் அத்தியாயம் முடிந்துவிட்டது எனக்கூறி புதுக்கட்சி தொடங்கிவிட்டார். கையறு நிலையில் இருக்கும் பன்னீர்செல்வம் வேறு வழியின்றி, இதுநாள்வரை தான் ஏற்றிருந்த கொள்கைக்கு முரணாக இருந்தாலும், வேறு வழியின்றி திமுக பக்கம் சாய்ந்திருப்பதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.