ஜெயலலிதாவின் பரம விசுவாசி, 3 முறை ‘இன்ஸ்டன்ட்’ முதல்வர், அதிமுக ஒருங்கிணைப்பாளர், தர்மயுத்த நாயகன் என கலவையான் முகங்களைக் கொண்ட ஓபிஎஸ், எந்த இயக்கத்தை எதிர்த்து அரசியல் செய்தாரோ, அதே இயக்கத்தில் அடைக்கலமாகி இருப்பது அவரது அரசியல் வரலாற்றில் பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது.
“துரோகிகளிடம் இருந்து கட்சியைக் காப்பாற்றுவேன்” என்று ஜெயலலிதா சமாதியில் கண்ணீர் விழிகளுடன் தர்மயுத்தம் தொடங்கிய அந்த பன்னீர்தானா இவர்?” என ஒரு தரப்பில் இருந்து ஆதங்கக் கேள்விகள் எழுகின்றன. திமுக-வை எதிர்த்து எம்ஜிஆரால் துவங்கப்பட்டதுதான் அதிமுக. ஜெயலலிதாவும் தனது வாழ்நாள் முழுவதும் திமுக எதிர்ப்பையே முழுமூச்சாகக் கொண்டிருந்தார்.
திமுக-வை எதிர்க்காமல் அதிமுக-வுக்கு வாழ்வு இல்லை... அதிமுக-வை அனுசரித்தால் திமுக-வுக்கு வாழ்வு இல்லை. இதுதான் கடந்த ஐம்பதாண்டு கால தமிழக அரசியலின் யதார்த்தம். அப்படி இருக்கையில் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் எண்ணங்களுக்கு மாறாக ஓபிஎஸ் திமுக-வில் இணைந்திருப்பதால் யாருக்கு லாபம்?
2017-ல் ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து ஓபிஎஸ் நடத்திய தர்மயுத்தம் தமிழக அரசியலில் அவருக்கென ஒரு தனி பிம்பத்தை உருவாக்கியது. சசிகலா குடும்பத்தை எதிர்த்து இந்த யுத்தத்தை தொடங்கிய ஓபிஎஸ், “அதிமுக-வை மீட்பேன்” எனச் சபதமெடுத்தார்.
அன்று கட்சியை காப்பாற்றப் போவதாகக் கூறியவர், இன்று அக்கட்சியின் பரம எதிரியான திமுக-வுடன் கைகோத்திருப்பது அவர் நடத்திய தர்மயுத்தத்தையே சந்தேகத்துக்கு உள்ளாகி இருக்கிறது. தனது இந்த முடிவால், “அப்படியானால் எல்லாமே நடிப்பா கோபால்?” என்று அதிமுக-வின் அடிமட்டத் தொண்டனும் கேலி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார் ஓபிஎஸ்.
“தமிழக வரலாற்றில் மிகச் சொற்பமானவர்களுக்கே 3 முறை முதலமைச்சர் நாற்காலியில் அமரும் வாய்ப்புக் கிட்டி இருக்கிறது. அதில் ஓபிஎஸ்ஸும் ஒருவர். ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தவர், மாற்றுக் கட்சியில் ஒரு பொறுப்பாளராக இணைவது என்பது பதவி ரீதியாக மிகப்பெரிய வீழ்ச்சியாகும்.
ஒரு முன்னாள் முதல்வர், தனது சுயமரியாதையை விட்டுவிட்டு எதிரணியில் இணைவது, அவர் தனது அரசியல் இருப்பை தக்கவைக்க எந்த எல்லைக்கும் செல்வார் என்பதையே காட்டுகிறது. இது ஒரு தலைவனுக்குரிய குணமல்ல” என்று வரும் விமர்சனங்கள் ஓபிஎஸ்ஸின் காதிலும் இந்நேரம் விழுந்திருக்கும். ஓபிஎஸ்ஸுக்கு தென் தமிழகத்தில் குறிப்பாக, முக்குலத்தோர் சமுதாய மக்கள் மத்தியில் கணிசமான ஆதரவு இருந்தது.
அது அதிமுக-வின் முகம் அல்லது ஜெயலலிதாவின் விசுவாசத் தொண்டர் என்ற அடிப்படையில் அவருக்குக் கிடைத்த சொத்து. ஓபிஎஸ் அதிமுக-வில் இருந்ததால் அவருக்கு வாக்களித்த முக்குலத்தோர் சமுதாயம் இப்போது அவர் திமுக-வுக்குப் போன பிறகும் அதேஆதரவை அவருக்குக் கொடுக்கும் என எதிர்பார்க்க முடியாது.
திமுக எதிர்ப்பு மனநிலை கொண்ட அந்த வாக்கு வங்கி, ஓபிஎஸ் வருகையால் திமுக-வுக்கு அப்படியே திரும்பி விடாது. மாறாக, பழனிசாமி வசமோ அல்லது வேறு திசையிலோ திரும்பும். இதனால் ஓபிஎஸ் தனது சமுதாய மக்கள் மத்தியில் தனக்கிருந்த செல்வாக்கையும் தொலைக்கப் போகிறார்.
அதனால் தான் அவரது இந்த முடிவை மறைமுகமாக பழனிசாமிக்கு கிடைத்த வெற்றி என அதிமுக கொண்டாடுகிறது. “திமுக-வின் பி-டீம் தான் ஓபிஎஸ்” என்று பழனிசாமி தரப்பு இத்தனை நாளும் சொல்லி வந்த குற்றச்சாட்டுக்கு தனது அறிவாலயப் பிரவேசம் மூலம் அத்தாட்சி பத்திரம் எழுதிக் கொடுத்திருக்கிறார் ஓபிஎஸ்.
சட்டப் பேரவையில் கருணாநிதியைப் புகழ்ந்தது, முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது, அவரது மகன் திமுக-வுக்கு பாராட்டு பத்திரம் வாசித்தது போன்ற செயல்பாடுகளும் ஓபிஎஸ்ஸின் தொலை நோக்குத் திட்டத்தை அப்போதே அம்பலப்படுத்தியது. எனவே, ஓபிஎஸ்ஸின் இந்த நகர்வானது அதிமுக-வினர் மத்தியில் பழனிசாமியின் தலைமைக்கு மேலும் வலு சேர்க்கும்.
ஜெயலலிதா இருந்தவரை அதிகாரத்தின் உச்சத்தில் இருந்த ஓபிஎஸ், தக்க நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்கத் தவறியதாலும், தனது நிலையற்ற தன்மையாலும் இன்று தனது பரம எதிரியிடமே சரணடைந்து முட்டுச் சந்தில் வந்து நிற்கிறார். ஆக, அம்மா சமாதியில் ஆர்ப்பாட்டமாய் தொடங்கிய ஓபிஎஸ்ஸின் தர்மயுத்தம் அறிவாலய வாசலில் அஸ்தமித்துவிட்டது. இனி அதிமுக-வுக்கும் நிம்மதி; அதை வழி நடத்தும் பழனிசாமிக்கும் அதைவிட நிம்மதி.
ஓபிஎஸ் திமுக-வில் இணைந்ததைத் தொடர்ந்து அவரது சொந்த மாவட்டமான தேனி திமுக-வில் பெரும் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது. மீண்டும் அவர் போடியில் போட்டியிடலாம் என்று வரும் செய்திகள் திமுக வட்டாரத்தில் புகைச்சலைக் கிளப்பி இருக்கிறது. தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளரான தங்கத்தமிழ்செல்வனும் ஓபிஎஸ்ஸும் ஜெயலலிதா காலத்தில் இருந்தே எலியும் பூனையுமாக இருப்பவர்கள்.
இருவரும் மீண்டும் இப்போது ஒரே கட்சிக்குள் வந்திருப்பதால் பழைய வரலாறு நிச்சயம் திரும்பும். ஓபிஎஸ்ஸுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை தங்கத்தமிழ் செல்வனால் நிச்சயம் ஜீரணித்துக் கொள்ள முடியாது.
திமுக-வை பொறுத்தவரை மாவட்டச் செயலாளர்கள் தான் அதிகார மையம் என்பதால் தங்கத்தை மீறி பன்னீராலும் எதையும் சாதித்துவிட முடியாது. அதிமுக-வின் முகமாக இருந்து தேனி மாவட்டத்தில் அரசியல் செய்த ஓபிஎஸ்ஸுக்கு திமுக கரை வேஷ்டியை கட்டிக் கொண்டு அதிமுக-வினர் மத்தியில் உலவுவதும் தர்மசங்கடத்தை உண்டாக்கும்.
அதனால், இந்த சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளாமல் பக்கத்து மாவட்டங்களில் தனக்கு பாதுகாப்பான தொகுதியைத் தேடி ஓபிஎஸ் இடம்பெயரலாம் என்றும் அவரது ஆதரவாளர்கள் காதைக் கடிக்கிறார்கள்.
வேறு மாவட்டத்தில் களமிறங்க திட்டம்?
ஓபிஎஸ் திமுக-வில் இணைந்ததைத் தொடர்ந்து அவரது சொந்த மாவட்டமான தேனி திமுக-வில் பெரும் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது. மீண்டும் அவர் போடியில் போட்டியிடலாம் என்று வரும் செய்திகள் திமுக வட்டாரத்தில் புகைச்சலைக் கிளப்பி இருக்கிறது.
தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளரான தங்கத்தமிழ்செல்வனும் ஓபிஎஸ்ஸும் ஜெயலலிதா காலத்தில் இருந்தே எலியும் பூனையுமாக இருப்பவர்கள். இருவரும் மீண்டும் இப்போது ஒரே கட்சிக்குள் வந்திருப்பதால் பழைய வரலாறு நிச்சயம் திரும்பும். ஓபிஎஸ்ஸுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை தங்கத்தமிழ் செல்வனால் நிச்சயம் ஜீரணித்துக் கொள்ள முடியாது.
திமுக-வை பொறுத்தவரை மாவட்டச் செயலாளர்கள் தான் அதிகார மையம் என்பதால் தங்கத்தை மீறி பன்னீராலும் எதையும் சாதித்துவிட முடியாது. அதிமுக-வின் முகமாக இருந்து தேனி மாவட்டத்தில் அரசியல் செய்த ஓபிஎஸ்ஸுக்கு திமுக கரை வேஷ்டியை கட்டிக் கொண்டு அதிமுக-வினர் மத்தியில் உலவுவதும் தர்மசங்கடத்தை உண்டாக்கும்.
அதனால், இந்த சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளாமல் பக்கத்து மாவட்டங்களில் தனக்கு பாதுகாப்பான தொகுதியைத் தேடி ஓபிஎஸ் இடம்பெயரலாம் என்றும் அவரது ஆதரவாளர்கள் காதைக் கடிக்கிறார்கள்.