சென்னை: வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது குறித்து தொண்டர்கள் துண்டு சீட்டில் எழுதித் தர ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தினார்.
சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தனது கட்சி நிர்வாகிகளுடன் பெரியகுளம் அருகே உள்ள தனது பண்ணை வீட்டில் ஆலோசனையில் ஈடுபட்டார்.
அப்போது தொண்டர்களின் விருப்பம் மற்றும் கருத்துக்களை துண்டு சீட்டில் எழுதித் தருமாறு ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். இதற்கு சில நிர்வாகிகள் ஆதரவும், சிலர் எதிர்ப்பும் தெரிவித்தனர்.
ஒரு சில நிர்வாகிகள் கூட்டணி குறித்து தாங்கள் எடுக்கும் முடிவுக்கு ஒத்துழைப்பு அளிப்பதாகவும், ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் மாறி மாறி கருத்துக்களை கூறியதால் கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
இதனை செய்தியாளர்கள் தங்களது செல்போனில் படம் பிடித்ததை அடுத்து தனது உதவியாளர் மூலம் செய்தியாளர்கள் அனைவரையும் கூட்டத்தில் இருந்து வெளியேற்றுமாறு ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தினார்.
இதனால் செய்தியாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், கூட்டத்தில் தொடர்ந்து காரசாரமாக விவாதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.