கோவையில் சந்தித்துக் கொண்ட அண்ணாமலை, ஓ.பன்னீர்செல்வம்.
கோவையில் ஓபிஎஸ் ஆதரவாளர் இல்ல நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் சந்தித்து தனியே பேச்சுவார்த்தை நடத்தினர்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேகம் சூடுபிடித்துள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற இயக்கத்தை தொடங்கி அதன் ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார்.
என்.டி.ஏ (தேசிய ஜனநாயக கூட்டணியில்) கூட்டணியில் இருந்த அவர், சமீபத்தில் அக்கூட்டணியை விட்டு வெளியேறினார். இதற்கிடையே, சில நாட்களுக்கு முன்னர் ஓ.பன்னீர்செல்வம், தனது மகன் மற்றும் நிர்வாகிகளுடன் டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து தனது அரசியல் எதிர்காலத்துக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி விட்டு வந்தார்.
பன்னீர்செல்வம் டெல்லிக்கு சென்று வந்த கையோடு, பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலையும் டெல்லிக்கு விசிட் அடித்தார். மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை அவர் சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே, வரும் 15-ம் தேதிக்குள் முக்கிய முடிவு எடுக்கப் போவதாக பன்னீர்செல்வம் கூறியிருந்தார். இதனால் அவர் மீண்டும் என்.டி.ஏ கூட்டணியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்தச் சூழலில், கோவையில் நடைபெற்ற ஓபிஎஸ் ஆதரவாளர் இல்ல நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வமும், அண்ணாமலையும் சந்தித்துக்கொண்டனர். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் கோவை மாவட்ட செயலாளராக இருப்பவர் பீளமேட்டைச் சேர்ந்த மோகன்ராஜ். இவர், ஆரம்பக்காலம் தொட்டே பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்து வருகிறார். இவரது இல்ல விழா கோவையில் நடைபெற்றது.
இதில், பன்னீர்செல்வம், தனது மகன் ஜெயபிரதீப்புடன் கலந்து கொண்டார். அப்போது, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையும் அந்த விழாவுக்கு வந்திருந்தார். மேடையில் இருவரும் சந்தித்துக் கொண்டனர். பின்னர், ஒருவருக்கு ஒருவர் சால்வை அணிவித்து மரியாதை தெரிவித்துக் கொண்டனர். பின்னர், சிறிது நேரம் பன்னீர்செல்வமும், அண்ணாமலையும் தனியாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதிமுகவில் மீண்டும் இணைவது, என்.டி.ஏ. கூட்டணியில் இணைவது, அதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை, டெல்லியின் பார்வை உள்ளிட்டவை குறித்து இருவரும் கலந்துரையாடியதாக அவர்களது ஆதரவாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. அதன் பின்னர், இருவரும் அங்கிருந்து தனித்தனியாக புறப்பட்டுச் சென்றனர்.