சென்னை: தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் அமைந்த ஆட்சியை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் பாராட்டியதற்கு, திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து, அவரை பேச விடாமல் கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் நேற்று கூடியது. மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா தலைமையில், ஆணையர் ஜி.எஸ்.சமீரன், துணை மேயர் மு.மகேஷ் குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் கே.பி.கே.சதீஷ்குமார் பேசும்போது, ``நான் வார்டு பிரச்சினையை மட்டும்தான் பேச வந்திருக்கிறேன்.
மற்றவர்களைப் போல கட்சித் தலைவரின் புகழ் பாட வரவில்லை''என்றார். இதனால் கோபமடைந்த திமுக கவுன்சிலர்கள், அதிமுக கவுன்சிலர் சதீஷ்குமாரை முற்றுகையிட்டு கூச்சலிட்டனர். காகிதங்களை எடுத்து சதீஷ்குமார் மீது வீசினர். திமுக கவுன்சிலர்கள் அனைவரும் எழுந்து, சதீஷ் குமாருக்கு எதிராக கூச்சலிட்டனர்.
இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. அதனைத் தொடர்ந்து, ``அனைத்து மண்டலக்குழு அலுவலகங்களிலும் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்தை அகற்றுவதைத் தடுக்க வேண்டும். மண்டலக்குழு கூட்டங்களில் தவெகவினர் பங்கேற்பதைத் தடுக்க வேண்டும்.
பள்ளிகளில் ஆளுங்கட்சியினர் முதல்வர் விஜய் படத்தை மாட்டி, கட்சிக் கொள்கை பாடல்களை பாடுவதைத் தடுக்க வேண்டும். திமுக ஆட்சியில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் முதல்வர் விஜய் படம் வைப்பதைத் தடுக்கவேண்டும்'' என்று திமுக கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
பின்னர் மேயர் பிரியா பேசும்போது, ``பள்ளிகள், மண்டலக் குழு அலுவலகங்களில் முன்னாள் முதல்வர் படங்களை வைக்க அனுமதி உள்ளது. மாநகராட்சி பள்ளிகளில் கட்சி நிகழ்ச்சிகளை நடத்தினால், பள்ளி தலைமையாசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வரும் காலங்களில் புதிய அரசு சார்பில் செயல்படுத்தும் திட்டங்களில் வேண்டுமானால் முதல்வர் படத்தை வைத்துக்கொள்ளலாம்'' என்றார். காங்கிரஸ் கவுன்சிலர் எம்.எஸ்.திரவியம், ``முதல்வர் விஜய் தலைமையில், தமிழகத்தில் நல்லாட்சி அமைந்ததற்கு பாராட்டுகள்'' என்று பேச்சைத் தொடங்கினார்.
இதற்கு திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கவுன்சிலர்களை சூழ்ந்துகொண்டு, காங்கிரஸ் துரோகி எனக் கூச்சலிட்டு, காங்கிரஸ் கவுன்சிலரை தொடர்ந்து பேசவிடாமல் இடையூறு செய்தனர். இதனால் மாமன்றத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதைக் கண்டித்து, காங்கிரஸ் கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
திமுக கவுன்சிலர் பரிதி இளம் சுருதி பேசும்போது, குட்டிக்கதை சொல்கிறேன் எனக்கூறி, பெரம்பூர் தொகுதியில் ஒரு பாட்டி, தான் வாக்களித்த எம்எல்ஏவை தேடியதாகவும், கையில் மின் வெட்டு தொடர்பான புகார் மனு வைத்திருந்ததாகவும் தெரிவித்தபோது, மாமன்றமே சிரிப்பலையில் அதிர்ந்தது.
பின்னர், மாநகராட்சி பள்ளிகளில் தற்காலிக இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்வது உள்ளிட்ட 38 தீர்மானங்கள் மாமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.