தமிழகம்

140 ஆண்டு பழமையான ஊட்டி ‘அசெம்ப்ளி ரூம்ஸ்’ வளாகத்தை தனியார்மயமாக்க எதிர்ப்பு

ஆர்.டி.சிவசங்கர்

ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 140 ஆண்டுகள் பழமையான வரலாற்றுச் சிறப்​புமிக்க அசெம்ப்ளி ரூம்ஸ் திரையரங்க வளாகத்தை தனியார்​மய​மாக்கும் முயற்​சிக்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்​றனர். ஊட்டி பூங்கா சாலையில் அமைந்துள்ள அசெம்ப்ளி ரூம்ஸ் திரையரங்க வளாகத்தை தனியார்​மய​மாக்கும் முயற்​சியை, நீலகிரி மாவட்ட ஆட்சியர் தலைமையிலான அறங்காவலர்கள் முன்னெடுத்து வருவதாக தகவல் வெளியாகி​யுள்ளது.

இதற்கு தெரிவிக்​கப்​படும் காரணங்கள் பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்க விரும்​புபவர்களை கவலையடையச் செய்துள்ளது. பல ஆண்டுகளாக இந்த பாரம்​பரியக் கட்டிடத்தை பாதுகாத்து வந்த மக்களும், சமூக அமைப்​பு​களும் தற்போது அதனை காக்கும் போராட்​டத்தில் ஈடுபடத் தொடங்​கி​யுள்​ளனர். இதுதொடர்பாக நீலகிரி ஆவண காப்பக இயக்குநர் டி.வேணு கோபால் கூறும்​போது, ‘‘அசெம்ப்ளி ரூம்ஸ் தற்போது 140 ஆண்டுகளை எட்டி​யுள்ளது.

அதன் நூற்றாண்டு விழா 1986-ம் ஆண்டு கொண்டாடப்​பட்டது. 100 ஆண்டு​களுக்கு மேல் பழமையான கட்டிடங்​களையும் பாரம்பரிய சொத்துகளையும் பாதுகாக்கும் நோக்கில் இயற்றப்பட்ட தமிழ்நாடு பாரம்பரிய ஆணைய சட்டத்தின் கீழ், அதன் கட்டமைப்பு, பயன்பாடு அல்லது பராமரிப்பில் மேற்கொள்​ளப்​படும் எந்த மாற்றமும் சட்டரீ​தியான பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

அசெம்ப்ளி ரூம்ஸின் பாரம்பரிய தன்மையை அரசு, நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் இணைந்து பாதுகாத்து வந்துள்​ளனர். சுதந்​திரத்​துக்கு முன்பே இயங்கி வந்த ஒரு உணவகம் 1970-களில் காலி செய்யப்​பட்டது. அங்கு செயல்​பட்டு வந்த மற்றொரு உணவகமும் அண்மையில் மூடப்​பட்டது. மேலும், இந்திய ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் அமைக்கும் முயற்சி பொதுமக்​களின் எதிர்ப்பால் கைவிடப்​பட்டது. கடந்த ஆண்டு காவல்துறை உதவி மையம் அமைக்கும் திட்டம் மக்கள் எதிர்ப்பால் நிறுத்​தப்​பட்டது.

இந்த சூழ்நிலை​யில், பாரம்பரிய நிறுவனத்தை முழுமையாக தனியார்​மயப்​படுத்தும் முயற்சி ஏற்றுக்​கொள்ள முடியாது. அசெம்ப்ளி ரூம்ஸ் ஊட்டியின் நூற்றாண்டை நினைவு​கூரும் விதமாக உருவாக்​கப்பட்ட ஒரு பொது அறக்கட்டளை ஆகும். பொதுமக்கள் பொழுது​போக்கு மற்றும் சமூக நலனுக்காக உருவாக்​கப்பட்ட இந்த அறக்கட்​டளைக்காக ரூ.50,000 நிதி மக்கள் பங்களிப்பின் மூலம் திரட்​டப்​பட்டது. பொதுநல நோக்கத்​துடன் உருவாக்​கப்பட்ட ஒரு அறக்கட்​டளையை தனியார் வணிக நிறுவனமாக மாற்றுவது ஏன்? மாற்றமடைந்த காலத்​திற்​கேற்ப அசெம்ப்ளி ரூம்ஸும் தனது சேவைகளை விரிவுபடுத்தி வந்துள்ளது.

1931-ம் ஆண்டு ஐரோப்​பியர்​களும் இந்தி​யர்​களும் ரூ.30,000 நிதி அளித்ததன் மூலம் இது திரைப்பட அரங்கமாக மாற்றப்​பட்டது. அதன் பின்னர் தரமான திரைப்​படங்களை குறைந்த கட்டணத்தில் திரையிடுவதன் மூலம் பொழுது​போக்​குடன் ஆங்கில அறிவு மற்றும் சமூக விழிப்​புணர்​வையும் உள்ளூர் மக்களிடம் பரப்பி வந்துள்ளது. கடந்த 140 ஆண்டுகளாக அசெம்ப்ளி ரூம்ஸ் தன்னிறைவு அடிப்​படையில் செயல்​பட்டு வந்துள்ளது. பல காலகட்​டங்​களில் அறக்கட்​டளையின் நோக்கங்​களுக்குள் உபரி வருவாயை எவ்வாறு பயன்படுத்​துவது என்பதே முக்கிய விவாதமாக இருந்ததாக கூறப்​படு​கிறது.

சமீப ஆண்டு​களில் வாகன நிறுத்​துமிட வசதியின் மூலம் கூடுதல் வருவாய் ஈட்டியதுடன், சுற்றுலா வாகன நெரிசலை சமாளிப்​ப​திலும் அது முக்கிய பங்காற்றி வந்துள்ளது. அசெம்ப்ளி ரூம்ஸின் வருவாயை அதிகரிக்க, அதன் அடிப்படை நோக்கங்களை பாதிக்​காமல் பல்வேறு புதுமையான வழிகள் இன்னும் உள்ளன. புதிய நிர்​வாகத்தை கொண்டு வரு​வதற்குப் பதிலாக திறமையான மேலாண்​மை​யும் தகு​தியான அறங்​காவலர்​களும் தேவை’’ என்றார்.

SCROLL FOR NEXT