சென்னை: மேகேதாட்டு அணையை தடுக்கும் தமிழக அரசின் முயற்சிகளுக்கு துணை நிற்போம் என்று சட்டப்பேரவையில் திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தங்களது முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளன.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் (திமுக): நீண்டகால சட்ட, அரசியல் போராட்டங்களை நடத்திதான் நாம் காவிரி மீதான உரிமையை பெற்றெடுத்தோம். ஆனால் அதைப் பறிக்கும் வகையில் கர்நாடக அரசு, மேகேதாட்டுவில் அணைகட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு எதிராக முதல்வர் கொண்டு வந்துள்ள தீர்மானத்தை வரவேற்கிறோம். சட்டரீதியாகவும், பிரதமர் மூலமாகவும் அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு திமுக துணை நிற்கும்.
இந்தாண்டு மேட்டூர் அணை திறக்காததால், டெல்டா விவசாயிகள் சிரமத்தில் உள்ளனர். குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அடுத்த காவிரி ஆணையக் கூட்டத்தில் உறுதியாக பேசி, நமக்கான தண்ணீர் பங்கீட்டை பெறவேண்டும். இந்த தீர்மானத்தை அனைத்து எம்எல்ஏக்களும், எம்.பி.க்களும் இணைந்து குழுவாகச் சென்று மத்திய அரசிடம் வழங்கி நமது ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும். இதற்கு திமுக முழு ஆதரவை வழங்கும். அரசியல் வேறுபாடுகளை கடந்து தமிழக அரசு முன்வரவேண்டும்.
முன்னாள் முதல்வர் பழனிசாமி (அதிமுக): மேகேதாட்டு அணை கட்டப்படுவதை தடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் அதிமுக ஆட்சிக் காலத்தில்தான் எடுக்கப்பட்டன. அணை கட்டினால் காவிரி படுகை பாலைவனமாகிவிடும். இரு மாநில நல்லுறவை சீர்குலைக்கும் நோக்கில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது. நீண்ட சட்டப்போராட்டத்தின் அடிப்படையில் நிலைநிறுத்தப்பட்ட உரிமையை பாதுகாக்க வேண்டியது நம் கடமை. எனவே, அரசின் தனித்தீர்மானத்தை அதிமுக ஆதரிக்கிறது.
அமைச்சர் ராஜேஷ்குமார் (காங்கிரஸ்): மேகேதாட்டு அணை கட்டப்பட்டால் தமிழக விவசாயிகளின் எதிர்காலம், காவிரிக்கூட்டு குடிநீர் திட்டம் கேள்விக்குறியாகும். கர்நாடகாவின் ஒருதலைபட்சமான நடவடிக்கையை காங்கிரஸ் கண்டிக்கிறது. அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் முழு ஆதரவை தெரிவிக்கிறது.
சவுமியா அன்புமணி (பாமக): மேகதாட்டு அணை விவகாரத்தை மிகப்பெரும் பிரச்சினையாக எடுத்துக்கொள்ள வேண்டும். காவிரி நீர் படுகையில் கர்நாடக அரசு எந்த விதமான அணையையும் கட்ட அனுமதிக்கக் கூடாது. முதல்வர் கொண்டு வந்துள்ள தீர்மானத்துக்கு முழு ஆதரவு.
டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்): தீர்மானத்தை ஆதரிக்கிறோம். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். அவர்களின் அரசுதான் கர்நாடகாவில் ஆட்சியில் உள்ளது. பிரச்சினையை சரிசெய்ய தமிழக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் முயற்சிக்க வேண்டும்.
செல்லசுவாமி (மார்க்சிஸ்ட்): தீர்மானத்தை மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்கிறது. இந்த நீதிக்காக, விவசாயிகளின் நியாயத்துக்காக தொடர்ச்சியாக சட்டப்பேரவை தலையிட வேண்டும்.
அமைச்சர் வன்னியரசு (விசிக): வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம். விசிக சார்பில் இதை வரவேற்கிறோம். தமிழர் உரிமை காக்க விசிக துணையாக இருக்கும்.
பிரேமலதா (தேமுதிக): நீரில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழகம் மாறவேண்டும். தமிழகத்தில் வாய்ப்புள்ள இடங்களிலே நதிகளை இணைக்க வேண்டும். மழைநீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க வேண்டும்.
தி.மு.ராஜேந்திரன் (மதிமுக): நமது உரிமையை பாதுகாக்க தயங்கமாட்டோம் என்பதை அண்டை மாநிலத்துக்கும், மத்திய அரசுக்கும் உணர்த்தும் வகையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை மதிமுக முழுமையாக வரவேற்கிறது.
எம்.எச்.ஜவாஹிருல்லா (மமக): முதல்வர் இதுகுறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தி பிரதமரை நேரடியாக டெல்லியில் சந்தித்து தமிழக மக்களின் உணர்வுகளை, பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எடுத்துரைக்க வேண்டும். அரசு கொண்டு வந்த தீர்மானத்தை வரவேற்கிறேன்.
தமிமுன் அன்சாரி (மஜக): அணை கட்டும் முயற்சி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரானது. தீர்மானத்தை எங்கள் கட்சியின் சார்பில் வழிமொழிகிறேன்.
கே.நித்யானந்தன் (கொமதேக): அரசு எடுக்கும் அனைத்து நியாயமான நடவடிக்கைகளுக்கு துணையாக இருப்போம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.