தமிழகம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஓ.பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம்

அ.கோபால கிருஷ்ணன்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திங்கள் கிழமை (இன்று) சுவாமி தரிசனம் செய்தார். அவரிடம் செய்தியாளர்கள் பேட்டி கேட்டதற்கு தை பிறக்கட்டும், என தெரிவித்து விட்டு, கோயிலுக்குள் சென்றார்.

முன்னாள் முதல்வரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வத்தின் குலதெய்வம் கோயில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது. தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்யும் போதும், முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு முன்பும் குலதெய்வம் கோயில் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பன்னீர்செல்வம் வழிபாடு நடத்துவது வழக்கம்.

ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய நிலையில், 2026 சட்டப்பேரவை தேர்தலில் எந்த கூட்டணியில் இடம் பெரும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில் திங்கள் கிழமை காலை (இன்று) ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஓ.பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம் செய்தார்.

அப்போது செய்தியாளர்கள் பேட்டி கேட்டதற்கு "தை பிறக்கட்டும்" என கூறிவிட்டு, கோயிலுக்கு சென்றார். அவர் தை பிறக்கட்டும் என கூறியது பேட்டிக்கா அல்லது தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது போல் கூட்டணி குறித்த முடிவுக்கா என்பது தெரியவில்லை.

தொடர்ந்து செண்பகத் தோப்பு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குலதெய்வமான வனப்பேச்சி அம்மன் கோயிலுக்கு செல்லும் பன்னீர்செல்வம், சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்ய உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT