சென்னை: கூட்டுறவு நிறுவனங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆன்லைன் கொள்முதல் முறையில், சுயஉதவிக் குழுக்களின் தயாரிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அமைச்சர் காந்திராஜ் உத்தரவிட்டார்.
இதுகுறித்து கூட்டுறவுத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நுகர்வோர் கூட்டுறவு நிறுவனங்களில் பொருட்கள் கொள்முதல் செய்வதில் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யும் வகையில், ஏற்கெனவே நடைமுறையில் இருந்த கூட்டு கொள்முதல் குழு முறை ரத்து செய்யப்பட்டு, ஆன்லைன் கொள்முதல் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன் செயல்பாடு குறித்து கூட்டுறவுத் துறை அமைச்சர் வ.காந்திராஜ், தலைமைச் செயலகத்தில் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, புதிய முறையில் கூட்டுறவுச் சங்கங்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள், உற்பத்தியாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வழங்குநர்கள் அதிக அளவில் பங்கேற்கும்வகையில் விளம்பரங்கள் மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மாநிலம் முழுவதும் உள்ள உற்பத்தியாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட வழங்குநர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு பயிற்சி வழங்கி, அதிக நபர்களை ஆன்லைன் கொள்முதல் முறையில் இணைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். பொருட்கள் கொள்முதல் செய்யப்படும்போதும், அவை கூட்டுறவு விற்பனை நிலையங்களுக்கு வந்து சேரும்போதும் கடுமையான தரப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
இதன்மூலம் பொதுமக்களுக்கு தரமான பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். கூட்டுறவுச் சங்கங்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் தயாரிக்கும் பொருட்களுக்கு அதிக சந்தை வாய்ப்பும், தொடர்ச்சியான கொள்முதல் வாய்ப்பும் கிடைக்கும் வகையில் புதிய ஆன்லைன் முறையைச் செயல்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் அறிவுறுத்தினார்.