சென்னை: தமிழகத்தில் தற்போது 38 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளில் 37 மாவட்ட பஞ்சாயத்துகள், 397 ஊராட்சி ஒன்றியங்கள், 12,570 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் 1,06,453 வார்டுகள் உள்ளன. ஊரக உள்ளாட்சியில் மொத்தம் வார்டு கவுன்சிலர் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் என 1,18,978 பதவிகளுக்கு நேரடி தேர்தலும், ஊராட்சி மன்ற துணைத் தலைவர், ஒன்றியக்குழு தலைவர், துணைத் தலைவர், மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர் என 5,973 பதவிகளுக்கு மறைமுக தேர்தலும் நடைபெறும்.
நகர்ப்புற உள்ளாட்சிகளில் 25 மாநகராட்சிகள், 146 நகராட்சிகள், 478 பேரூராட்சிகள் உள்ளன. இவற்றில் 12,838 வார்டுகள் உள்ளன. இதில் 12,838 கவுன்சிலர் பதவிகளுக்கு நேரடி தேர்தலும், மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகள் என 13,373 பதவிகளுக்கு மறைமுக தேர்தலும் நடைபெறும்.
மேற்கூறிய உள்ளாட்சி அமைப்புகளில் 28 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளின் பதவி காலம் கடந்த 2025-ம் ஆண்டு ஜன.5-ம் தேதியுடன் நிறைவடைந்தது. காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளின் பதவி காலம் வரும் அக்.19-ம் தேதியுடனும், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளில் அடுத்த ஆண்டு மார்ச் 1-ம் தேதியுடனும் நிறைவடைய உள்ளது.
புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, அடுத்த ஆண்டு பிப்ரவரியில் அனைத்து உள்ளாட்சிகளுக்கும் தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதில் மொத்தம் 1,31,816 பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடைபெறும்.
இதற்காக சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. வேட்பாளர்கள் ஊர்வலமாக வரும் பழக்கம் கொண்டிருப்பதால், வேட்புமனு தாக்கலின்போது, தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் இடம்பெற்றுள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
அரசியல் கட்சிகள், கட்சி சாரா வேட்பாளர்கள் அனைவரும் தங்கள் வலிமையை, எதிர்த்தரப்புக்கு தெரிவிக்கும் களமாக வேட்புமனு தாக்கலை கருதுகின்றன. அங்கு கூட்டம் சேர்ப்பதற்கும், வெற்றி வாய்ப்புக்கும் துளியும் தொடர்பில்லை என்பதை தவெக தலைவர் விஜய், கடந்த சட்டப்பேரவை தேர்தலில் நிரூபித்துள்ளார்.
மக்களவை, சட்டப்பேரவை தேர்தலை விட உள்ளாட்சி தேர்தலில் தான் கடும் போட்டியும், தேர்தல் மோதல்களும் அதிகமாக நடக்கும். போட்டியிடுவோரும் அதிமாக இருப்பார்கள். வேட்புமனு தாக்கல் ஊர்வலங்களும் அதிகமாக இருக்கும். போக்குவரத்து நெரிசலும் அதிகமாகும். அதனால், வரும் உள்ளாட்சிதேர்தலில் இணைய வழியில்மட்டுமே வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் நடைமுறையை கொண்டுவர வேண்டும்.
அதற்கான சட்டத் திருத்தத்தை வரும் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் தவெக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்றைய சூழலில் கிராமவாசிகள் கூட பல ஆண்டுகளாக தங்களுக்கான சமூகநல திட்ட பயன்களை பெறவும், தங்கள் குழந்தைகளுக்கு சாதிச்சான்றை பெறவும், இ-சேவை மையம் மூலமாக இணையவழியில் மட்டுமே விண்ணப்பித்து வருகின்றனர்.
எனவே, வேட்பு மனு தாக்கலையும் இணையம் மூலமாக தாக்கல் செய்யும் நடைமுறையை கொண்டு வரலாம். இதில் ஆள்மாறாட்டத்தை தவிர்க்க ஆதார் ஓடிபி மூலமாக கூட வேட்புமனு தாக்கலை முடிக்கும்படி செய்யலாம். வெளிப்படைத் தன்மையும் அதிகரிக்கும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.