அமைச்சர் ரமேஷ்

 
தமிழகம்

“தமிழக கோயில்களில் விரைவில் ஆன்லைன் தரிசன டிக்கெட்” - பேரவையில் அமைச்சர் தகவல்

ச.கார்த்திகேயன்

சென்னை: “தமிழக கோயில்களில் தரிசனம் செய்வதற்கான டிக்கெட் ஆன்லைனில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று சட்டப்பேரவையில் அமைச்சர் எஸ்.ரமேஷ் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, அதிமுக எம்எல்ஏ கோ.அரி பேசும்போது, "திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு திருத்தணி தொகுதியைச் சேர்ந்த உள்ளூர் பக்தர்கள் செவ்வாய்க்கிழமை தோறும் காலை, மாலை இருவேளைகளிலும் தாளாக 2 மணி நேரம் சுவாமி தரிசனம் செய்து வந்தனர். கடந்த திமுக ஆட்சியில் 5 ஆண்டு காலம் அந்த சேவை நிறுத்தப்பட்டது.

எனவே இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் உள்ளூர் மக்கள் நலன் கருதி காலை, மாலை இருவேளை செவ்வாய்க்கிழமை தோறும் முன்னுரிமை அடிப்படையில் சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இதற்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் எஸ்.ரமேஷ் அளித்த பதில்: “கோயில்களில் உள்ளூர் மக்களை அனுமதிப்பது தொடர்பாக ஏற்கெனவே பல்வேறு கோரிக்கை வந்துள்ளன. திருத்தணி தொகுதி எம்எல்ஏவும் அது தொடர்பாக கோரிக்கை மனு அளித்துள்ளார்.

பல்வேறு கோயில்களில் முன்னுரிமை அளித்து தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரிக்கைகள் வந்துள்ளன. கோயில்களில் பக்தர்கள் வரிசை மேலாண்மை செய்வதில் சட்ட சிக்கல்கள் உள்ளன.

ஒரு கோயிலின் பக்தர்கள் கொள்திறன் 30 ஆயிரமாக இருக்கும்போது, ஒரே நாளில் 50 ஆயிரம் பேர் வரும் நிலையில், தரிசன நேரம் அதிகமாகிறது. அப்போது வரிசை மேலாண்மை செய்வதிலும் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன.

திருத்தணி கோயிலில் உள்ளூர் பக்தர் அனுமதிப்பது தொடர்பாக ஏற்கெனவே அறங்காவலர் குழுக்களின் பரிந்துரையை கேட்டிருக்கிறோம். விரைவில் இணையதளம் மூலமாக தரிசன டிக்கெட் பெற மென்பொருள், இணையதளம், செயலி உருவாக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

அதில் உள்ளூர் மக்களுக்கு தரிசன வசதி எப்படி கொண்டு வருவது என ஆய்வு செய்து வருகிறோம். இந்த சேவை அமலுக்கு வரும்போது உள்ளூர் மக்கள் தரிசனத்துக்கான சேவை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் பதிலளித்தார்.

SCROLL FOR NEXT