மதுரை: தூத்துக்குடி மாவட்டம் முத்தாலங்குறிச்சியைச் சேர்ந்த காமராஜ், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தாமிரபரணி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள பல்வேறு நிறுவனங்கள் அரசுக்கு ரூ.250 கோடி நீர் வரி பாக்கி வைத்துள்ளன.
தனியார் சிமென்ட் ஆலை மற்றும் பல்வேறு நிறுவனங்கள் தண்ணீர் வரி பாக்கியை செலுத்தாமல் தொடர்ந்து தாமிரபரணி ஆற்றிலிருந்து நீரை எடுத்து பயன்படுத்தி வருகின்றன.
இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதுடன், அளவுக்கு அதிகமாக நீர் உறிஞ்சப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது.
எனவே, தாமிரபரணி ஆற்றிலிருந்து நீர் எடுக்கும் நிறுவனங்களிடமிருந்து வரி பாக்கியை வசூலிக்கவும், அந்த நிதியை ஆற்றின் பாதுகாப்பு மற்றும் புனரமைப்புக்கு பயன்படுத்தவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது. பொதுப்பணித் துறை சார்பில், தாமிரபரணியிலிருந்து தண்ணீர் எடுக்கும் தனியார் நிறுவனங்களிடமிருந்து லிட்டருக்கு ஒரு பைசா வீதம் தண்ணீர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது எனக் கூறப்பட்டது. அதற்கு நீதிபதிகள், “தனியார் நிறுவனங்கள் ஒரு லிட்டர் தண்ணீரை ரூ.20-க்கு விற்கின்றன.
அவர்களுக்கு வழங்கப்படும் தண்ணீருக்கு ஒரு லிட்டருக்கு ஒரு பைசாதான் இன்னமும் வசூலிக்கப்படுகிறதா?” என்று கேள்வி எழுப்பினர். பின்னர் நீதிபதிகள், “தாமிரபரணி ஆற்றில் எத்தனை நிறுவனங்கள் தண்ணீர் எடுக்கின்றன, ஒரு நாளைக்கு எடுக்கும் தண்ணீரின் அளவு என்ன, இதுவரை எவ்வளவு தண்ணீர் எடுக்கப்பட்டுள்ளது, தண்ணீருக்கான மொத்த கட்டணம் எவ்வளவு, அதில் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது? 20 ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயம் செய்த தண்ணீர் கட்டணத்தை இன்னும் ஏன் உயர்த்தவில்லை என்பது தொடர்பாக நெல்லை ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.