சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு நட்சத்திர விடுதிகள், பண்ணை வீடுகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில் தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீஸார் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
ஆங்கிலப் புத்தாண்டு பிறக்க இன்னும் 2 நாட்களே உள்ளன. கொண்டாட்டத்தில் ஈடுபட பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். பல்வேறு ஏற்பாடுகளை சென்னையில் உள்ள நட்சத்திர விடுதிகள் செய்து வருகின்றன. டிசம்பர் 31-ம் தேதி (புதன்கிழமை) நள்ளிரவு ஓட்டல்கள், கடற்கரை, ரிசார்ட்டுகளில் உற்சாகம் களைகட்டும்.
டிசம்பர் 31-ம் தேதி மாலை 6 மணிக்குத் தொடங்கி அடுத்த நாள் (ஜன.1) அதிகாலை வரை நடைபெறும் புத்தாண்டு நிகழ்ச்சிகளில் எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் தவிர்ப்பதற்காக காவல் துறை பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஹோட்டல்கள், நட்சத்திர உணவு விடுதிகள், கேளிக்கை விடுதிகள் ஆகியவற்றுக்கு வரும் வாகனங்கள் முறையாக சோதனையிட்டு பதிவு செய்வது, அனைத்து நுழைவு வாயில்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்துவது, நிகழ்ச்சி மற்றும் விருந்து நடைபெறும் பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது போன்ற பணிகள் நடைபெறுகின்றன.
அனுமதிக்கப்பட்ட அரங்கத்தில் மட்டுமே புத்தாண்டு நிகழ்ச்சிகளை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் நீச்சல் குளத்துக்கு செல்லும் வழிகள் அனைத்தும் அடைக்க வேண்டும். வாகனங்களை அந்தந்த ஹோட்டல்களின் வாகன நிறுத்துமிடத்திலேயே நிறுத்த வேண்டும். மதுபானங்கள் அனுமதிக்கப்பட்ட மதுபானக் கூடத்திலேயேபரிமாற வேண்டும்.
காவல் துறையால் அளிக்கப்படும் நேரக் கட்டுப்பாடு கட்டாயமாக பின்பற்ற வேண்டும். கேளிக்கை நிகழ்ச்சிகளின்போது பெண்களை கேலி செய்வதைத் தடுக்க போதுமானபாதுகாப்பு ஊழியர்களை; குறிப்பாக பெண் பாதுகாவலர்கள் நியமிக்க வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கட்டுப்பாடுகளை மீறும் ஹோட்டல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது. சென்னை மட்டும் அல்லாமல் நெல்லை, மதுரை, திருச்சி, கோவை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாட்டம் களைகட்டும் என்பதால், அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட உள்ளனர். வாகன பந்தயத்தில் ஈடுபடுவோர், மதுபோதையில் வாகனம் ஓட்டுவோரை பிடிக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் சாலைத் தடுப்புகள் அமைக்கப்பட உள்ளன.
அதுமட்டும் அல்லாமல் முக்கிய பகுதிகளில் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தி வைக்கப்பட உள்ளன. அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்களும் உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட உள்ளனர்.