சென்னை: வரி என்ற பெயரில் அதிகாரிகள் லஞ்ச வேட்டையில் ஈடுபடுவதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து சென்னை கோயம்பேட்டில் அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க தலைவர் ஜெய பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகத் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன.
ஆனால், அதிக கட்டணம் வசூலித்ததாகக் கூறி இதுவரை எந்த அதிகாரியும் ஆம்னி பேருந்துகளிடம் இருந்து முறையான அபராதக் தொகையைப் பெறவில்லை. மாறாக, அதிக கட்டணம் வசூலிப்பதாகக் கூறி சோதனை என்ற பெயரில் பேருந்து உரிமையாளர்களிடம் மாமூலும் வசூலித்து வருகின்றனர்.
ஒரு வாகனத்திற்கு வாரம் ரூ.40 ஆயிரம் என மாதத்திற்கு ஒரு லட்சம் வரை வரி வசூலிக்கின்றனர். தமிழகத்தில் இருந்து கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்ற பிற மாநிலங்களுக்குச் செல்லும் தமிழக வாகனங்கள் எந்தச் சிரமமும் இன்றி நிம்மதியாகச் சென்று வருகின்றன. ஆனால், அண்டை மாநில வாகனங்கள் தமிழகத்திற்குள் வரும்போது, செக் போஸ்ட்களில் அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் வாகனங்களை மறிக்கின்றனர்.
இதனால், 3 மணி நேரம் காலதாமதமாகவே பயணங்களை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. திராவிட கட்சிகளின் ஆட்சிகளில் என்ன மாதிரியான வழிப்பறிகள் நடந்தனவோ, அதே நிலைதான் இந்த ஆட் சியிலும் தொடர்கிறது. மாதத்திற்கு ரூ.10 கோடிக்கும் அதிகமாக அரசுக்கு வரி செலுத்தும் சூழ்நிலையில், ஆம்னி பேருந்துகளுக்கு மூன்று முறை வரி வசூலிக்கக்கூடாது என அமைச்சரிடம் முறையிட்டபோது, அதிகாரிகள் எங்கள் பேச்சைக் கேட்பதில்லை. இடைத்தேர்தலுக்கு பிறகு பார்த்துக்கொள்ளலாம் என கூறுகிறார். இந்த விவகாரத்தில் அரசு விரைந்து தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.