தமிழகம்

கோயம்பேடு பேருந்து நிலையத்தை மீண்டும் திறக்க ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: “பயணி​கள் நலன் கருதி கோயம்பேடு பேருந்து நிலை​யத்தை மீண்​டும் திறக்க வேண்​டும்” என, அனைத்து ஆம்னி பேருந்து உரிமை​யாளர்​கள் சங்​கம் வலி​யுறுத்​தி​யுள்​ளது.

தலை​மைச் செயல​கத்​தில் போக்​கு​வரத்​துத் துறை அமைச்​சர் விஜய் தமிழன் பார்த்​திபனை நேற்று சந்​தித்த பிறகு, அனைத்து ஆம்னி பேருந்து உரிமை​யாளர்​கள் சங்​கத் தலை​வர் அன்​பழகன் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: மிகப்​பெரிய பேருந்து நிலை​ய​மான கோயம்​பேடு பேருந்து நிலை​யத்தை மீண்​டும் பயன்​பாட்​டுக்கு கொண்டு வர வேண்​டும்.

இது சென்னை மக்​களின் நீண்ட நாள் கோரிக்​கை​யாக​வும் உள்​ளது. கிளாம்​பாக்​கம் பேருந்து நிலை​யத்​தில், தற்​போது, ஆம்னி பேருந்​துகளுக்​கான நுழைவுக் கட்​ட​ணம் ரூ.150 ஆக உள்​ளது. இதை ரூ.500 ஆக உயர்த்த திட்​ட​மிடப்​பட்​டுள்​ள​தாக தகவல் கிடைத்​துள்​ளது.

கட்​ட​ணத்தை இவ்​வளவு அதி​க​மாக உயர்த்​தக் கூடாது. மேலும், போக்​கு​வரத்​துத் துறை​யின் அனைத்து சேவை​களும் முழு​மை​யாக ஆன்​லைன் முறைக்கு மாற்​றப்பட வேண்​டும்.

இதன்​மூலம், இடைத்​தரகர்​கள் மற்​றும் தேவையற்ற தாமதங்​களை தவிர்க்க முடி​யும். குறிப்​பாக, வாக​னங்​களுக்​கான சிறப்பு எண் ஒதுக்​கீட்டு நடை​முறையை ஆன்​லைன் மூலம் செயல்​படுத்​தி​யிருப்​பதை வரவேற்​கிறோம்.

முன்பு சிறப்பு எண் பெற டீலர்​கள், ஏஜென்ட்​டு​கள் உள்​ளிட்​டோரின் உதவியை நாட வேண்டி இருந்​தது. அதற்​காக, ரூ.7 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை கூடு​தல் செல​வாகி வந்​தது. தற்​போது, எந்த இடைத்​தரகரும் இல்​லாமல் நேரடி​யாக விண்​ணப்​பித்து பெறும் வசதி ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

இதன் மூலம் வெளிப்​படைத்​தன்மை அதி​கரித்​துள்​ளது. போக்​கு​வரத்​துத் துறை​யில் லஞ்​சம் மற்​றும் மறை​முக செல​வு​கள் குறைந்​து, சேவை​கள் விரை​வாக​வும், வெளிப்​படை​யாக​வும் நடை​பெறும் என்ற நம்​பிக்கை ஏற்​பட்​டுள்​ளது. அனைத்து சேவை​களும் ஆன்​லைன் மயமாக்​கப்​பட்​டால் இந்த மாற்​றம் மேலும் வலுப்​பெறும்.

ஒரு பேருந்​தில் பயணிக்க வேண்​டிய 40 பேர் தற்​போது தனித்​தனி கார்​கள் அல்​லது வாடகை வாக​னங்​களில் கிளாம்​பாக்​கம் செல்ல வேண்​டிய நிலை உள்​ளது. இதனால், போக்​கு​வரத்து நெரிசலும், சுற்​றுச்​சூழல் மாசு​பாடும் அதி​கரிக்​கிறது.

எனவே, கோயம்​பேடு பேருந்து நிலை​யத்தை மீண்​டும் திறப்​பது அவசி​யம். ஆம்னி பேருந்து கட்டண நிர்​ண​யம் தொடர்​பான வழக்கு உயர் நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் உள்​ளது.

ஆம்னி பேருந்​துகளுக்கு தனி அனு​மதி மற்​றும் கட்டண நிர்ணய முறை உரு​வாக்​கப்பட வேண்​டும். கட்டண ஒழுங்​கு​முறையை கொண்டு வர அரசுடன் இணைந்து செயல்பட தயா​ராக உள்​ளோம்.

ஆம்னி பேருந்து சேவை​கள் தொடர்​பான பல்​வேறு கோரிக்​கைகள் அரசின் பரிசீலனை​யில் உள்​ளன. அவற்​றுக்கு சாதக​மான முடிவு​கள் கிடைக்​கும் என்ற நம்​பிக்​கை இருக்​கிறது. இவ்​வாறு அனைத்து ஆம்னி பேருந்து உரிமை​யாளர்​கள் சங்​கத் தலை​வர் அன்​பழகன் கூறி​உள்ளார்​.

SCROLL FOR NEXT