சென்னை: கோயம்பேடு ஒப்பந்த ஊர்திப் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகளுக்கான நுழைவு கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் முதல்வர் விஜய்க்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோயம்பேடு சென்னை ஒப்பந்த பேருந்து நிலையத்தில், ஆம்னி பேருந்துகளுக்கான நுழைவுக் கட்டணம் 24 மணி நேரத்துக்கு ரூ.150 வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் எந்த ஆலோசனையும் இல்லாமல் வரும் 15-ம் தேதி முதல் அதே 24 மணி நேரத்துக்கு ரூ.500 வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள், சாலை வரி, காப்பீடு, சுங்கக் கட்டணம் மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட செலவுகளால் பேருந்து உரிமையாளர்கள் ஏற்கெனவே பெரும் பொருளாதாரச் சுமையை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பேருந்து நிலைய நுழைவுக் கட்டணத்தின் இந்த உயர்வு மேலும் செலவுச் சுமையை ஏற்படுத்தும். ஒரு பேருந்துக்கு மாதத்தில் 30 நாட்களும் முந்தைய மாதச் செலவு ரூ.4,500-லிருந்து ரூ.15ஆயிரமாக உயர்ந்து, ஒரு பேருந்துக்கு மாதம் ரூ.10,500 கூடுதல் செலவு ஏற்படும். இந்தச் செலவு பயணக் கட்டணங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
ஒரே நேரத்தில் இவ்வளவு அதிகமான உயர்வை அமல்படுத்துவது பேருந்து உரிமையாளர்களுக்கும் பயணிகளுக்கும் சிரமத்தை ஏற்படுத்தும். எனவே, முதல்வர் தலையிட்டு, அக்.15-ம் தேதி முதல் ஆம்னி பேருந்துகளுக்கான நுழைவுக் கட்டணத்தை ரூ.500-ஆக உயர்த்தும் அறிவிப்பின் அமலாக்கத்தை உடனடியாக நிறுத்திவைக்க வேண்டும். கட்டண உயர்வு குறித்த மறுபரிசீலனை முடியும் வரை, ஆம்னி பேருந்துகளுக்கு 24 மணி நேரத்துக்கு ரூ.150 என்ற முந்தைய நுழைவுக் கட்டணத்தையே தொடர்ந்து வசூலிக்க வேண்டும்.
சிஎம்டிஏ அதிகாரிகள், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து, நியாயமான நுழைவுக் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். தற்போது பயன்பாடின்றி உள்ள கோயம்பேடு பேருந்து நிலையத்தை ஆம்னி பேருந்துகளின் பயன்பாட்டுக்கு ஒதுக்கித் தருமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.