தமிழகம்

தேர்தல் 2026: மதுரை மாவட்ட திமுகவில் பழையவர்களுக்கே மீண்டும் வாய்ப்பு?

நேர்காணலில் பங்கேற்ற நிர்வாகிகள் ஏமாற்றம்

செய்திப்பிரிவு

மதுரை: மதுரை மாவட்டத்தில் மேற்குத் தொகுதியை தவிர மற்ற தொகுதிகளில் மீண்டும் பழையவர்களுக்கே வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால் கடமைக்கு நடந்த நேர்காணலில் பங்கேற்று திரும்பிய திமுக நிர்வாகிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் மதுரை மத்தி, கிழக்கு, வடக்கு, மேற்கு, சோழவந்தான், உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிய 7 தொகுதிகளில் திமுக போட்டியிட உள்ளது.

இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவாலயத்தில் விருப்பமனு கொடுத்த திமுக நிர்வாகிகளிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் நேர்காணல் செய்தனர்.

          

இதில், சாதாரண வட்ட செயலாளர் முதல் மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள் வரை விருப்பமனு கொடுத்தவர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார். சிலர் முதல்வர் ஸ்டாலினை பார்க்கவும், நேரில் உரையாடவும் ஒரு வாய்ப்பாக கருதி இந்த நேர்காணலில் பங்கேற்றனர்.

பலர், நேர்காணலில் தங்களுடைய வித்தைகளை காட்டி முதல்வரிடம் நல்ல பெயர் வாங்கி ‘சீட்’ பெறலாம் என்ற நம்பிக்கையுடன் பங்கேற்றனர். கருணாநிதி காலத்தில் விருப்பமனு கொடுத்தவர்களிடம் தனித்தனியாக அழைத்து நேர்காணல் நடத்துவார்.

ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒட்டுமொத்தமாக ஒரு தொகுதிக்கு விருப்பமனு கொடுத்தவர்களை அழைத்து நேர்காணல் நடத்தினார். தொகுதியைப் பற்றி பல்வேறு தயாரிப்புகளுடன் சென்ற முக்கிய நிர்வாகிகள், முதல்வரிடம் தொகுதியின் தற்போதைய சூழ்நிலை, தங்களுடைய எதிர்பார்ப்புகள், ஏற்கெனவே சிட்டிங் எம்எல்ஏ ஆக உள்ளவர்கள் மீதான அதிருப்திகளையும் சொல்ல வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தனர்.

ஆனால், நேர்காணல் நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், தொகுதி நிலவரத்தையும், அதிருப்திகளையும், கள நிலவரத்தையும் தெரிவிக்க யாருக்கும் வாய்ப்பு கொடுக்கவில்லையாம். இதுவே விருப்பமனு கொடுத்தவர்களிடம் தங்களுக்கு ‘சீட்’ கிடைக்காது என்ற அவநம்பிக்கை யையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

நேர்காணலில் விண்ணப்பித்த அனை வரிடமும் முதல்வர் உள்ளிட்டவர்கள் தனித்தனியாக பேசாமல், அனைவரையும் ஒன்றாக அமர வைத்து, கட்சி வாய்ப்பு அளிப்போருக்கு கோஷ்டி பூசல் இல்லாமல் தேர்தல் பணியாற்ற வேண்டும், வாய்ப்பு கிடைக்காதவர்கள் முன்னேற்றத்தை கட்சி பார்த்துக் கொள்ளும் என்று பொத்தாம்பொதுவாக சொல்லி அனுப்பியுள்ளனர்.

நேர்காணலுக்கு முன்பு வரை, கடந்த முறை போட்டியிட்ட சிலருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டால், அந்த தொகுதிகளில் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று திமுக நிர்வாகிகள், ஆர்வமுடன் நேர்காணலுக்கு புறப்பட்டுச் சென்றனர். ஆனால், கடந்த முறை போட்டியிட்டவர்களுக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுவதாகவும், மேற்கு தொகுதியில் மட்டுமே அமைச்சர் பி.மூர்த்தி கைகாட்டும் புதியவர் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதனால், நேர்காணலில் பங்கேற்று திரும்பிய ‘சீட்’ எதிர்பார்த்து காத்திருந்த திமுக நிர்வாகிகள் ஏமாற்றம் அடைந்தனர். அவர்கள் கூறுகையில், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்த முறை சென்னை பக்கம் செல்ல வாய்ப்பு இருப்பதாகவும், அதற்கு பதில் மதுரை மத்தி தொகுதியில் புதியவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயராமன், கவுன்சிலர் நூர்ஜஹான், ஒச்சுபாலு, துணைத்தலைவர் சின்னம்மாள் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு கொடுத்தனர்.

அவர்களிடம் நேர்காணல் நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜெயராமன், நூர்ஜஹான் உள்ளிட்டவர்களிடம் மட்டுமே பேசியுள்ளார். ஆனாலும், மீண்டும் ‘சீட்’டை மதுரை மத்தியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு கட்சித் தலைமை 'டிக்' செய்துள்ளது.

மதுரை கிழக்கில் வழக்கம்போல் அமைச்சர் பி.மூர்த்தியும், மதுரை வடக்கில் மாநகர மாவட்டச் செயலாளர் கோ.தளபதி, மதுரை சோழவந்தானில் வெங்கடேசன் எம்எல்ஏவுக்கும் ‘சீட்’ வழங்க கட்சித் தலைமை முடிவு செய்துள்ளது.

உசிலம்பட்டி, மதுரை மேற்கு தொகுதியில் மட்டுமே இதுவரை வேட்பாளர் யார் என்று உறுதி கூற முடியாவிட்டாலும், மேற்கு தொகுதியில் அமைச்சர் பி.மூர்த்தி கை காட்டும் நபருக்கும், உசிலம்பட்டியில் 3 பேர் கடும் போட்டியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதனால், மூத்த நிர்வாகிகள், இளைஞர்கள் பலருக்கு ‘சீட்’ கிடைக்காது என்று தெரிந்தவுடன் அவர்கள் சோர்வடைந்து விட்டனர்.

SCROLL FOR NEXT