தமிழகம்

“என்எல்சிக்கு நிலம் கையகப்படுத்துவதில் அதிகாரிகள் முறைகேடு” - பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

ம.வீரவேல்

கடலூர்: நெய்வேலி என்எல்சிக்கு நிலம் கையகப்படுத்துவதில் முறைகேட்டில் ஈடுபட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று காலை கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க முன்னாள் மாநிலத் தலைவர் பாலகிருஷ்ணன் நிருபர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “சமீப காலத்தில் தமிழ்நாட்டில் திரும்பிய பக்கமெல்லாம் ஊழல், முறைகேடு, லஞ்ச லாவண்யம் தலைவிரித்து ஆடுகிறது. இந்தியாவே காறித் துப்பக்கூடிய அளவுக்கு தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ள ஊழல்கள் குறித்த தகவல்கள் கடந்த 3 நாட்களாக பரவலாக பேசப்பட்டு வருகிறது.

மக்களுடைய அறிவை வளர்த்துக் கொள்வதற்காக உள்ள நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்கியதில் முறைகேடு, போலி எழுத்தாளர்கள், போலி பதிப்பகங்கள், கமிஷன் வாங்கிக்கொண்டு பல கோடி கொள்ளை அடித்துள்ள சம்பவம் தமிழகத்தை உலுக்கிக் கொண்டிருக்கிறது.

அந்தக் கொடுமை ஒரு பக்கம் இருக்கும்போது, கடலூர் மாவட்டத்தில் இன்னொரு கொடுமை அதை விட மோசமாக வேறு எங்கும் இப்படி ஒரு மோசடி நடந்திருக்க முடியாது எனச் சொல்லும் அளவிற்கு இருக்கிறது. நெய்வேலி என்எல்சி உருவான காலத்திலிருந்து விவசாயிகள் கொடுத்த நிலங்களுக்கு அவர்களுக்கு நியாயமாக சேர வேண்டிய இழப்பீடு உள்ளிட்டவற்றை பெறுவதற்கு ஒவ்வொரு முறையும் போராட வேண்டிய நிலை உள்ளது.

பலகட்ட போராட்டங்களை நடத்தி, பேச்சுவார்த்தை நடைபெற்று, அரசாங்க அதிகாரிகள் ஒத்துக்கொள்வது, மாவட்ட ஆட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு ஏற்பட்ட பிறகு கூட அந்த உடன்பாட்டை என்எல்சி அதிகாரிகள் அமல்படுத்த மாட்டார்கள்.

நஷ்டஈடு வழங்காமல், வேலைவாய்ப்பு உள்ளிட்ட சலுகைகளையும் தரமாட்டார்கள். நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் இருப்பவற்றை மேற்கொள் காட்டித்தான் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் போடுகிறோம். அதற்குரிய சட்டங்கள் இருந்தும் கூட என்எல்சி அதிகாரிகள் இழப்பீடு தர மாட்டார்கள். மாவட்ட ஆட்சியரும் கண்டுகொள்ள மாட்டார்.

ஆனால், தற்போது தமிழ்நாடு அரசு சார்பில் நிலத்தை கையகப்படுத்த நியமிக்கப்பட்ட அதிகாரிகள் 25-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். நிலம் கையகப்படுத்துவதற்கு முன்பு தங்களுடைய உறவினர்கள் மூலம் அந்த நிலத்தை வாங்கி, அதை என்எல்சி க்கு கொடுப்பது போல கொடுத்து இழப்பீடு பெறுகிறார்கள்.

அதிகாரிகள் துணையோடு நிலத்தை கையகப்படுத்துவதற்கு மூன்று, நான்கு மாதங்களுக்கு முன்பு சிவங்கை, அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர் பகுதிகளைச்சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் பெயரில் எட்டு ஏக்கர் நிலம் பத்திரப்பதிவு நடந்துள்ளது. அதன்பின் அதற்கு மதிப்பீடு போடும் அதிகாரிகள், வீடு இல்லாத இடத்தில் வீடு இருந்ததாகவும், மரம் இல்லாத இடத்தில் மரங்கள் இருந்தது எனப் போலியாக மதிப்பீடு கொடுத்து ஒரு சென்ட் நிலத்திற்கு ரூ.70 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரை இழப்பீடு கொடுக்கிற மாதிரி மதிப்பீடு செய்கிறார்கள்.

முறையாக விவசாயிகளுக்கு சென்று சேரவேண்டிய பணம், இன்று அதிகாரிகளின் உறவினர்கள், பினாமிகளுக்கு போய்ச்சேரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

என்எல்சி அதிகாரிகள், பத்திரப் பதிவுத் துறை அதிகாரிகள், நிலம் கையகப்படுத்தும் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் எல்லோரும் சேர்ந்து ஒரு கூட்டுக்கொள்ளையை செய்கிறார்களோ என சந்தேகமாக உள்ளது. இவ்வளவு பெரிய முறைகேடு குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தால் நாங்கள் விசாரிக்கிறோம் எனக் கூறுகிறார்.

எவ்வளவு காலத்திற்கு நீங்கள் விசாரிப்பீர்கள். உடனடியாக நிலம் கையகப்படுத்தும் துறையில் உள்ள அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய வேண்டும். நிலத்தையும், வீட்டையும் இழந்து நிற்கும் விவசாயிகளுக்கு அந்த பணத்தை கொடுக்க வேண்டும்.

என்எல்சியிலிருந்து நூறுகோடி ரூபாய் பணப்பரிமாற்றம் இந்த நிலம் கையகப்படுத்தும் பணிக்காக நடக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதனால் தான் இன்றைக்கு இந்த போராட்டத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிள் சங்கம் செய்துள்ளது. மாவட்ட ஆட்சியர் சரியான முடிவெடுத்து பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்,” என்றார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT