தமிழகம்

நகராட்சி நிர்வாகத் துறை முறைகேட்டில் அதிகாரிகளுக்கும் தொடர்பு: அமலாக்கத் துறை மீண்டும் கடிதம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக நகராட்சி நிர்​வாகம் மற்​றும் குடிநீர் வழங்​கல் துறை​யில் நடை​பெற்​ற​தாக கூறப்​படும் டெண்​டர் முறை​கேடு மற்​றும் ஊழல் விவ​காரத்​தில், ஐபிஎஸ் மற்​றும் ஐஏஎஸ் அதி​காரி​களுக்​கும் தொடர்பு இருப்​ப​தாக டிஜிபிக்கு அமலாக்​கத் துறை கடிதம் அனுப்பி உள்​ளது.

தமிழகத்​தில் நகராட்சி நிர்​வாகம் மற்​றும் குடிநீர் வழங்​கல் துறை​யின்​கீழ் மேற்​கொள்​ளப்​பட்ட அரசு ஒப்​பந்​தங்​கள் மற்​றும் பணி நியமனங்​களில் பெரும் முறை​கேடு​கள் மற்​றும் ஊழல் நடந்​துள்​ள​தாக அமலாக்​கத் துறை குற்​றம்​சாட்​டி​யிருந்​தது. இது தொடர்​பாகத் தமிழக அரசின் தலை​மைச் செய​லா​ளர், டிஜிபி மற்​றும் லஞ்ச ஒழிப்​புத் துறைக்கு அமலாக்​கத் துறை ஏற்​கெனவே 2 முறை கடிதங்​களை அனுப்பி இருந்தது.

          

அதில், அரசு ஒப்பந்​தங்​களைப் பெறு​வதற்​காக டெண்​டர்கள் முறை​கேடாக கையாளப்​பட்​டு, ஒப்​பந்​தத் தொகை​யில் 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை லஞ்​ச​மாக வசூலிக்​கப்​பட்​ட​தாக குற்​றம்​சாட்​டப்​பட்​டுள்​ளது. இந்த தொகை ‘கட்சி நிதி’ என்ற பெயரில் திரட்​டப்​பட்​ட​தாக​வும் கூறப்​பட்​டுள்​ளது. மேலும், இந்த லஞ்​சத் தொகை​யின் நேரடி பயனாளி​களாக திமுக கட்​சி​யைச் சேர்ந்த சில தலை​வர்​கள் இருந்​த​தாக வும், அந்த நிதி அவர்​களிடம் சென்​ற​தாக​வும் அமலாக்​கத் துறை அறிக்​கை​யில் குறிப்​பிட்​டுள்​ள​தாக தகவல்​ தெரிவிக்​கிறது.

இந்​நிலை​யில், டெண்​டர் முறை​கேட்​டில் சில ஐஏஎஸ் மற்​றும் ஐபிஎஸ் அதி​காரி​களும் தொடர்​புடைய​வர்​களாக இருக்​கலாம் என்று அமலாக்​கத் துறை தனது சமீபத்​திய கடிதத்​தில் குறிப்​பிட்​டுள்​ளது. கவி பிர​சாத், டி.ரமேஷ், கே.என்.மணிவண்​ணன், பிரபு உள்​ளிட்​டோர் இந்த ஊழல் செயல்​பாடு​களில் முக்​கியபங்​காற்​றிய​தாகக் கூறப்​பட்​டுள்​ளது. இவர்​களின் செல்​போன்​களில் இருந்து கைப்​பற்​றப்​பட்ட உரை​யாடல்​கள் முக்​கிய ஆதா​ரங்​களாக இருப்​ப​தாக​வும் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. குறிப்​பாக, அமைச்​சர்​களுக்கு சாதக​மாக டெண்​டர் நிபந்​தனை​களை மாற்​றியமைப்​ப​தில் சில ஐஏஎஸ் அதி​காரி​கள் துணை நின்​ற​தாக​வும் கடிதத்​தில் கூறப்​பட்​டுள்​ளது.

சென்னை மாநக​ராட்​சி​யின் தூய்​மைப் பணி​யாளர்​களுக்​கான சீருடை கொள்​முதல் ஒப்பந்​தத்தை குறிப்​பிட்ட ஒரு​வருக்கு பெற்​றுத் தரு​வதற்​காக, அடிக்​கடி சர்ச்​சை​யில் சிக்​கும் ஒரு இளம் ஐபிஎஸ் அதி​காரி இடைத்​தரகரை தொடர்​பு​கொண்​ட​தாக​வும், இதற்​கான ஆதா​ரங்​கள் இருப்​ப​தாக​வும் அமலாக்​கத்துறை தெரி​வித்​துள்​ளது.

அந்த அதி​காரி ரகசிய மற்​றும் சென்​சிட்​டிவ் தகவல்​களை மூன்​றாம் நபர்​களு​டன் பகிர்ந்​த​தாக​வும், இது இந்​திய அரசி​யலமைப்​புச் சட்​டத்​துக்கு முரணான செயல் எனவும் கூறப்​பட்​டுள்​ளது. இது குறித்து தனிப்​பட்ட நடவடிக்கை எடுக்​கப்​படும் என்​றும் அமலாக்​கத் துறை எச்​சரித்​துள்​ளது.

மேலும், வசூலிக்​கப்பட்​டதாகக் கூறப்​படும் லஞ்​சத் தொகை உள்​நாடு மற்​றும் வெளிநாடு​களுக்கு ஹவாலா முறையில் சட்​ட​விரோத​மாக பரி​மாறப்பட்​ட​தாக​வும் குற்​றச்​சாட்டு முன்வைக்​கப்​பட்​டுள்​ளது. இந்த விவ​காரம் தொடர்பாக தமிழக காவல்​துறை உடனடி​யாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசா​ரணை தொடங்க வேண்டும் என்​றும் ஆதா​ரங்​கள் இருந்​தும் நடவடிக்கை எடுக்​கத் தவறி​னால் சம்​பந்​தப்​பட்ட அதி​காரி​களும் பொறுப்​பேற்க வேண்​டிய நிலை ஏற்​படும் என்​றும் அந்தக் கடிதத்​தில் அமலாக்கத் துறை அறிவுறுத்தியுள்​ளது.

நகராட்சி நிர்​வாகத் துறை​யில் நடந்துள்​ள​தாகக் கூறப்​படும் இந்த முறை​கேடு விவ​காரத்​தில் உயர்​மட்ட அதி​காரி​கள் பெயர் வெளி​யானது அரசி​யல் மற்​றும் நிர்​வாக வட்டாரங்​களில்​ ​அதிர்​வலைகளை ஏற்​படுத்​தியுள்​ளது.

SCROLL FOR NEXT