சீமான் | கோப்புப்படம்

 
தமிழகம்

மின்சாரம் தாக்கி உயிரிழந்த 2 குழந்தைகள் - அரசு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க சீமான் கோரிக்கை

வெற்றி மயிலோன்

சென்னை: ‘கமுதி அருகே அரசு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட மின்கசிவில் சிக்கி பலியான 2 குழந்தைகளின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.50 லட்சம் துயர் துடைப்பு உதவியாக வழங்க வேண்டும்’ என சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் அச்சங்குளம் கிராமத்தில் தம்பி மோகன் - லதா இணையரின் 11 வயதான நிறைமதி என்ற பெண் குழந்தையும், 6 வயது பால பிரவீன் என்ற ஆண் குழந்தையும் கடந்த (30.09.2026) அன்று காலை 8 மணி அளவில் அந்தப் பகுதியில் உள்ள அரசு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட மின்கசிவால் மின்சாரம் தாக்கி உயிரிழந்த துயரச் செய்தியறிந்து வேதனையுற்றேன்.

உயிருக்கும் மேலாக நேசித்து வளர்த்த இரண்டு பிஞ்சு குழந்தைகளையும் பறிகொடுத்து விட்டு ஆற்றமுடியாத பெருந்துயரத்தில் வாடும் பெற்றோருக்கும் குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

இந்த விபத்துக்கு காரணமான, அந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அரசு மின் இணைப்பு இல்லாமல் திருட்டுத்தனமாக மின்சாரம் எடுத்த ஊராட்சி செயலர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கடந்த 8 ஆண்டு காலமாக மின்சாரத் திருட்டை ஆதரித்த மின்வாரிய அலுவலர் மீதும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

குறிப்பாக, செயல்படாமல் இருந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பே ஏற்பட்ட மின்கசிவைச் சரிசெய்யக்கோரி அந்த கிராம இளைஞர்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் கொடுத்துள்ளனர். அப்போதே நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த இரண்டு பச்சிளம் குழந்தைகளின் உயிர் பறிபோய் இருக்காது.

புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாகச் செயல்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரும், தொடர்புடைய மின்வாரிய ஊழியர்களுமே இந்த இரண்டு பிஞ்சுகளின் உயிரிழப்புக்கு முதன்மை காரணமானவர்கள். இதனால் தமிழக அரசு உயிரிழந்த குழந்தைகளுக்கு ரூபாய் 25 லட்சம் வீதம் 2 குழந்தைகளுக்கும் சேர்த்து ரூபாய் 50 லட்சத்தைத் துயர் துடைப்பு நிதியாக வழங்க வேண்டும் எனவும்,

புகார் அளித்தும் கவனக்குறைவாகச் செயல்பட்ட அரசு அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய துயர் துடைப்பு உதவிகளைச் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.’ எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT