திமுக எம்.பி கனிமொழி
சென்னை: “இந்தக் கொடூரக் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும், சட்டப்படி கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்” என்று ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கு குறித்து திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள ‘ஜெம் கிரானைட்ஸ்’ நிறுவனத்தின் நிறுவனர் ஆர்.வீரமணி (84) மீதான போக்சோ வழக்கு விவகாரத்தில், திடுக்கிடும் பின்னணி தகவல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. பண பலமும், அதிகார பலமும் குற்றவாளிகளை எப்படி காப்பாற்ற முயன்றன என்பதையும், தற்போது இந்த வழக்கில் காவல்துறையின் உயரதிகாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் தொடர்பு குறித்தும் அதிர்ச்சித் தகவல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. இது அரசியல் ரீதியாக அதிர்வலைகளை எழுப்பி உள்ளது.
இந்நிலையில், இது குறித்து சமூக வலைதள பதிவு மூலம் திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார்.
“சமூகத்தில் மதிப்பிற்குரியவர்களாகக் கருதப்படுபவர்கள், குழந்தைகள் மீது இவ்வளவு கொடூரமான செயல்களில் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. 1990-களில் இருந்தே இக்குற்றச்சம்பவங்கள் நடைபெற்று வந்திருப்பதாகக் கூறப்படும் நிலையில், இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து இத்தகைய கொடுஞ்செயல்களில் அவர்களால் ஈடுபட முடிந்திருப்பதும், அதற்கான சூழல் சமூகத்தில் உருவாகியிருப்பதும் மிகுந்த கவலையளிக்கிறது.
இந்தக் கொடூரக் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும், சட்டப்படி கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.
இது தற்போது பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு மட்டும் கிடைக்க வேண்டிய நீதியல்ல. இனி எந்தக் குழந்தையும் இதுபோன்ற கொடுமைகளுக்கு ஆளாகாத வகையில், பாதுகாப்பான சமூகச் சூழலை உறுதி செய்ய வேண்டும்.
தவறு செய்தவர்கள் மட்டுமல்ல, தவறுக்கு உடந்தையாக இருந்தவர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்” என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.அமைச்சர் நிர்மல் குமார்