செங்கல்பட்டு: சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 38 கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால், டிச. 9-ம் தேதி சத்துணவு மையங்களை மூடிவிட்டு மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில பிரதிநிதித்துவ பேரவை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில பிரதிநிதித்துவ பேரவை செங்கல்பட்டில் நடைபெற்றது. மாநில தலைவர் பி. செல்லதுரை தலைமை வகித்தார். அஞ்சலி தீர்மானத்தை மாநில துணைத் தலைவர் எம்.ஆர். திலகவதி வாசித்தார். வரவேற்புக் குழுத் தலைவர் சா. முகமது உசேன் வரவேற்றார். பேரவையை தொடங்கி வைத்து சிஐடியு மாநில பொதுச் செயலாளர் எஸ். கண்ணன் பேசினார்.
மாநில பொதுச் செயலாளர் ஆ.ஜெசி வேலை அறிக்கையையும், மாநில பொருளாளர் வே. சித்திரா வரவு-செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் வாழ்த்திப் பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் மு.பாஸ்கரன் பேரவையை நிறைவு செய்து பேசினார்.
பேரவையில், பணி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர்களுக்கு ரூ.10 லட்சமும், சமையலர், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் பணிக்கொடை வழங்க வேண்டும். ஐந்து ஆண்டுகள் பணி நிறைவு செய்தும் சமையலர் பதவி உயர்வு கிடைக்காத உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். பதவி உயர்வுக்காக காத்திருக்கும் தகுதியானவர்களுக்கு அமைப்பாளர் பதவி உயர்வை விரைந்து வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
காலை உணவுத் திட்டத்தை சத்துணவுத் திட்டத்துடன் இணைக்க வேண்டும், சமூகத் தணிக்கை முறையை ரத்து செய்ய வேண்டும், சத்துணவு மையங்களில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். 10, 20, 30 ஆண்டுகள் பணி நிறைவு செய்தவர்களுக்கு பணி மூப்பு ஊதிய உயர்வை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
தற்செயல் விடுப்பை தேவைக்கு ஏற்ப எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும், பணிக்காலத்தில் உயிரிழந்த சத்துணவு ஊழியர்களின் ஆண் வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டும், தகுதி மற்றும் சிறப்புத் தகுதி பெற்ற அமைப்பாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி அக். 14-ம் தேதி வட்டார, மாவட்ட, மாநில நிர்வாகிகள் பங்கேற்று தமிழக முதல்வரிடம் பெருந்திரள் முறையீடு நடத்துவது என்றும், அதற்குப் பிறகும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில் டிச. 9-ம் தேதி சத்துணவு மையங்களை மூடிவிட்டு மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்துவது என்றும் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.