பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் கோரி, நந்திவரம் கூடுவாஞ்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடும் குளிரில் இரவு, பகலாக 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள்.

 
தமிழகம்

இரவு, பகலாக 4-வது நாளாக போராடும் செவிலியர்கள்: அமைச்சர் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை

செய்திப்பிரிவு

சென்னை: பணி நிரந்​தரம், சம வேலைக்கு சம ஊதி​யம் உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்தி தொகுப்​பூ​திய செவிலியர்கள் கடந்த 18-ம் தேதி சென்​னை​யில் உண்​ணா​விரதப் போராட்​டத்தை தொடங்கினர்.

தமிழ்​நாடு செவிலியர்கள் மேம்​பாட்​டுக் கழகம் சார்​பில் நடந்த உண்​ணா​விரதப் போராட்​டத்​தில் 750-க்​கும் மேற்​பட்ட செவிலியர்கள் பங்​கேற்ற நிலை​யில், அரசுக்கு எதி​ராக செவிலியர்கள் கோஷங்​களை எழுப்​பிய​தால், அவர்​களை போலீ​ஸார் கைது செய்​தனர்.

இதையடுத்​து, செவிலியர்கள் கிளாம்​பாக்​கம் பேருந்து நிலை​யம், ஊரப்​பாக்​கத்​தில் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யனுடன் நடந்த பேச்​சு​வார்த்தை தோல்வி அடைந்​த​தால், நந்​திவரம் கூடு​வாஞ்​சேரி ஆரம்ப சுகா​தார நிலை​யத்​தில் செவிலியர்கள் போராட்​டத்​தில் ஈடு​படத் தொடங்​கினர்.

நேற்று 4-வது நாளாக பகல், இரவாக செவிலியர்கள் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். கடும் பனி​யால் செவிலியர்​களில் பலருக்கு உடல்​நலக் குறைவு ஏற்​பட்​டுள்​ளது. ஆனாலும் அவர்​கள் போராட்​டத்தை தொடர்​கின்​றனர். அதே​போல தமிழகம் முழு​வதும் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​கள், மாவட்ட தலைமை மருத்​து​வ​மனை​களில் செவிலியர்கள் போராட்​டத்​தில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

போராட்​டத்​தில் ஈடு​பட்​டுள்ள செவிலியர்​களின் கோரிக்​கையை நிறைவேற்ற வேண்​டும் என்று அரசி​யல் கட்​சிகளின் தலை​வர்​கள், அரசு மருத்​து​வர் சங்​கங்​கள், சமூக ஆர்​வலர்​கள் வலி​யுறுத்தி வரு​கின்​றனர். இந்​நிலை​யில் இன்று மீண்​டும் சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன், போராட்​டத்​தில் ஈடு​பட்​டுள்ள செவிலியர்​களு​டன் பேச்​சு​வார்த்தை நடத்​தவுள்​ளார்.

பாமக தலை​வர் அன்​புமணி வெளி​யிட்ட அறிக்​கை: தமிழக சுகா​தா​ரத் துறை​யில் 10 ஆண்​டு​களாக தற்​காலிகப் பணி​யாளர்​களாக பணி​யாற்​றும் 8 ஆயிரத்​துக்​கும் கூடு​தலான செவிலியர்கள், தங்​களுக்கு பணி நிரந்​தரம் வழங்க வேண்​டும் என்று 4 நாட்​களாக போராடி வரு​கின்​றனர். அவர்​களை பணி நிரந்ந்​தரம் செய்ய முடி​யாது என்று தமிழக அரசு அறி​வித்​திருப்​பது, ஆட்​சி​யாளர்​களின் ஆணவத்​தைக் காட்​டு​கிறது.

இப்​போது ஒப்​பந்த செவிலியர்கள் எவ்​வாறு நியமிக்​கப்​பட்​டார்​களோ, அதே​போல் தான் கடந்த 2004-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்​சிக் காலத்​தில் 45 ஆயிரம் ஆசிரியர்​கள் தொகுப்​பூ​திய அடிப்​படை​யில் நியமனம் செய்​யப்​பட்​டனர். 2006-ம் ஆண்​டில் பாமக ஆதர​வுடன் ஆட்​சிக்கு வந்த கருணாநி​தி, அவர்​கள் அனை​வரை​யும் பணி நிரந்​தரம் செய்​தார்.

அதே ​போல் இப்​போது செய்ய எந்த தடை​யும் இல்​லை. அரசு அவ்​வாறு செய்​யத் தவறி​னால், வரும் தேர்​தலில் மக்​கள் அதிரடி​யான தீர்ப்பை வழங்​கு​வார்​கள். அதன்​பின் அமை​யும் ஆட்​சி​யில் ஒப்​பந்த செவிலியர்கள் அனை​வரும் பணி நிரந்​தரம் செய்​யப்​படு​வார்​கள்​. இவ்​வாறு அறிக்கையில்​ கூறி​யுள்​ளார்​.

SCROLL FOR NEXT