தமிழகம்

“கல்வி உரிமையை பறித்தது காங்கிரஸ்; வேடிக்கை பார்த்தது திமுக” - சீமான் சீற்றம்

செய்திப்பிரிவு

‘மாநிலத்துக்கான கல்வி உரிமையை பறித்தது காங்கிரஸ் கட்சி, அதை வேடிக்கை பார்த்தது திமுக. இவர்கள் மாநில உரிமையை பற்றி பேசுகின்றனர்’’ என்று சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி சார்பில் ‘எது அரசியல்’ என்ற தலைப்பிலான பொதுக்கூட்டம், சைதாப்பேட்டையில் நேற்று நடைபெற்றது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், சென்னை மாவட்ட சட்டப்பேரவை தொகுதி வேட்பாளர்கள் ஒரே மேடையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். பின்னர் சீமான் பேசியதாவது:

          

நீண்டகாலமாக நம் நிலத்தில் இருக்கிற அரசியலை மாற்ற வேண்டும் என்கிற புரட்சிகர சிந்தனையோடு, பெரும் கிளர்ச்சியை நாம் தமிழர் கட்சி முன்னெடுத்து வருகிறது. 2016-ல் தேர்தல் களத்துக்கு வந்த இக்கட்சி, அதன் பின் நடந்த எந்த தேர்தலையும் நிராகரிக்காமல் தொடர்ந்து களத்தில் நிற்கிறது. சந்தித்த முதல் தேர்தலில் 1.1 சதவீத வாக்குகளை பெற்றது. அதாவது 4.5 லட்சம் வாக்குகள். வேறு எந்த கட்சியாவது தேர்தலில் 4.5 லட்சம் வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தால் இந்நேரம் காணாமல் போயிருக்கும். அல்லது எதாவது கட்சியுடன் கூட்டணி அமைத்து கரைந்து போயிருக்கும். ஆனால் நாம் தமிழர் கட்சி தொடர்ந்து தேர்தல்களில் போட்டியிட்டு 36 லட்சம் வாக்குகளை (8.22%) பெற்று அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறியிருக்கிறது.

இன்றைக்கு அரசியல் என்பது அரிசியும், பருப்பும், வேட்டியும், சேலையும், ஆயிரமும், ஐநூறுமாக இருக்கிறது. நூறு ரூபாயை கொடுத்துவிட்டு இருநூறு ரூபாய்க்கு விளம்பரம் செய்கின்றனர். இந்த அரசியலை மாற்ற வேண்டும். அரசியல் என்பது எல்லா உயிர்களுக்குமான தேவையாகவும், அதை நிறைவு செய்யும் சேவையாகவும் இருக்க வேண்டும். இன்றைய சூழலில் கூட்டணிக்கு வெளிப்படையாக பேரம் பேசுகின்றனர். நாம் தமிழர் கட்சி எந்த கூட்டணிக்கும் செல்லாமல் தனித்து போட்டியிடுவது பலருக்கு கண்ணை உறுத்துகிறது. கூட்டணி வைக்காமல் எப்படி ஜெயிப்பது? என்கின்றனர். பொறுத்திருந்து பாருங்கள் எப்படி ஜெயிப்பது என்பதை நாங்கள் காட்டுகிறோம்.

திமுக கூட்டணி பாஜகவை வரவிடக்கூடாது என்று சொல்கிறது. அதிமுகவோ திமுக ஆட்சிக்கே வரக்கூடாது, அதை ஒழிக்க வேண்டும் என்கிறது. இந்த கட்சிகளுக்கு கொடியில் வண்ணம் மாறும். ஆனால் எண்ணம் மாறாது. மாநிலத்துக்கான கல்வி உரிமையை எடுத்து சென்றது காங்கிரஸ் கட்சி. அதை வேடிக்கை பார்த்தது திமுக. இவர்கள் மாநில உரிமையை பற்றி பேசுகின்றனர். நாங்கள் இந்த இரண்டு கட்சிகளுமே வரக்கூடாது, ஒழித்துவிட வேண்டும் என்கிறோம். திருச்சி மாநாட்டில் 6 லட்சம் பேர் கூடினர். ஆனால் ஒரு சத்தம், கூச்சல் இல்லை. ஒரு நாற்காலி உடையவில்லை. அந்தளவுக்கு கட்டுகோப்பான படை எங்களுடையது.

எங்களுக்கு இருக்கும் நெருக்கடி போல் யாருக்கும் இருக்காது. போட்டியிடும் இடங்களில் பெரும்பான்மையாக இருக்கும் சமூகங்களுக்கும் இடங்கள் குறைந்துவிடக்கூடாது. நிராகரிக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட சமூகத்தினரையும் அதில் விட்டுவிடக்கூடாது. மொத்தமாக 117 தொகுதிகளை பெண்களுக்கு கொடுக்கவேண்டும். அதுவும் படித்த, அரசியல் தெரிந்த, சமூக பிரதிநிதித்துவதுடன் அவர்கள் இருக்க வேண்டும். இதனால் அவர்களை தேர்ந்தெடுக்க கடந்த ஓராண்டாக தலையில் நெருப்பை கொட்டியது போல் சுற்றி வந்தேன். ஆதிதமிழ்க்குடிக்கு 4 பொதுத்தொகுதி, தேவேந்திரருக்கு 2 பொதுத்தொகுதி, பழங்குடியினருக்கு ஒரு பொதுத்தொகுதி இந்த தேர்தலில் வழங்கியிருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT