தாராபுரம் அருகே மூலனூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நாதக வேட்பாளர் கார்த்திகா.
தாராபுரம்: தாராபுரம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா, தாராபுரம் மற்றும் அதன் சுற்றி உள்ள கிராமப் பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்தப் பிரச்சாரத்தின்போது, தாராபுரம் நகரமற்றும் கிராமப்புறப் பகுதிகளில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாட்டுக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் என உறுதியளித்தார்.
உப்பார் அணைக்கு நீர் கொண்டு வருவதற்கான திட்டங்கள் விரைவுபடுத்தப்படும் என்றும், ஆனைமலையாறு– நல்லாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற நாம் தமிழர் கட்சி தீவிரமாக பாடுபடும் என்றும் வாக்குறுதி அளித்தார்.
“திராவிட மற்றும் தேசிய கட்சிகளின் பொய் வாக்குறுதிகளை நம்பி ஏமாந்தது போதும். லஞ்சம், ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்தை வழங்கவும், மக்களின் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் நாம் தமிழர் கட்சியின் விவசாயி சின்னத்துக்கு வாக்களித்து ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்” என வலியுறுத்தினார்.
பிரச்சார நிகழ்வின் போது கட்சி நிர்வாகிகள், இளைஞர் பாசறை உறுப்பினர்கள் மற்றும் மகளிர் பாசறையினர் திரளாகக் கலந்துகொண்டு, கட்சிச் சின்னம் பொறித்த துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.