என்.ஆர்.காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாட்டம் 

 

படம்: எம்.சாம்ராஜ்

தமிழகம்

புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் என்.ஆர். காங்கிரஸ் அமோக வெற்றி!

காங்கிரஸ் தவிர பிற வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு

செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் என்ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் 8,482 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். காங்கிரஸ் தவிர்த்து இதர வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழந்தனர்.

புதுச்சேரி சட்டப்பேரவைத் பொதுத்தேர்தலில் மங்கலம், தட்டாஞ்சாவடி ஆகிய 2 தொகுதிகளில் முதல்வர் ரங்கசாமி போட்டியிட்டார். 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற அவர், தட்டாஞ்சாவடி தொகுதியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு கடந்த 6-ஆம் தேதி நடந்தது. தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த், திமுக வேட்பாளர் சேதுசெல்வம், காங்கிரஸ் வேட்பாளர் விநாயகம், இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சலீம் உட்பட 11 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தேர்தலில் 80.81 சதவீத வாக்குகள் பதிவானது.

தேர்தலில் பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள் லாஸ்பேட்டை மோதிலால் நேரு பாலிடெக்னிக்கில் 3 அடுக்கு பாதுகாப்போடு ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

காலை 7 மணியளவில் வாக்கு எண்ணும் மையத்துக்கு வேட்பாளர்களின் முகவர்கள் அனுமதிக்கப்பட்டனர். முகவர்களுக்கு வழங்கப்பட்ட தேர்தல் அடையாள அட்டை சரிபார்க்கப்பட்டு, சோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டனர்.

முகவர்கள் செல்போன் உட்பட மின்னணு சாதனங்கள் கொண்டு வர அனுமதிக்கப்படவில்லை. வாக்கு எண்ணிக்கையையொட்டி லாஸ்பேட்டை மோதிலால் நேரு பாலிடெக்னிக் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. மொத்தம் 112 தபால் வாக்குகள் பதிவானது. இதில் 65 வாக்குகள் பெற்று என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் முன்னிலை பெற்றார்.

தொடர்ந்து 8.30 மணிக்கு தேர்தல் பார்வையாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் இருந்து கொண்டு வரப்பட்டது. வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. 31 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குககள் 4 சுற்றுகளாக எண்ணப்பட்டது. முதல், 2, 3-ம் சுற்றுகளில் தலா 8 என 24 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகளும், 4-வது சுற்றில் மீதமுள்ள 7 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டன.

இறுதியில் பெற்ற வாக்குகள்:

அசோக் ஆனந்த் (என்.ஆர். காங்) - 13,358

விநாயகம் (காங்கிரஸ்) - 4,876

சேதுசெல்வம் (திமுக) - 2,664

சலீம் (இந்திய கம்யூ.) - 310

கார்த்திக் குமாரி (நாதக) - 172

இதையடுத்து என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் 8,482 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இந்தத் தேர்தலில் காங்கிரஸை தவிர்த்து இதர வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழந்தனர்.

SCROLL FOR NEXT