கோப்புப் படம்

 
தமிழகம்

பேச்சுவார்த்தைக்கு வராமல் பாஜகவை இழுத்தடிக்கும் ரங்கசாமி: தவெக கூட்டணிக்கு தயாராவதாகத் தகவல்

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி இந்தத் தேர்தலுக்கும் தொடர்வதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும் பாஜக மற்றும் அதிமுக, லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் தொடங்கி இருக்கும் லட்சிய ஜனநாயகக் கட்சி ஆகியவை எஞ்சிய 14 தொகுதிகளை பங்கிட்டுக் கொள்வது எனவும் முடிவானது.

ஆனால் திடீரென போர்க்கொடி தூக்கிய என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும் முதல்வருமான ரங்கசாமி தனக்கு, இந்த முறையிலான கூட்டணியில் உடன்பாடு இல்லை என்று தெரிவித்தார். தனது ஆட்சிக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்து வந்த லட்சிய ஜனநாயக் கட்சியை கூட்டணியில் சேர்க்கக் கூடாது என்பது உள்ளிட்ட சில முக்கிய நிபந்தனைகளை அவர் வைத்ததாக கூறப்பட்டது.

          

இதையடுத்து ரங்கசாமியை சமாதானப்படுத்த புதுச்சேடி பாஜக-வினர் பல வகையிலும் முயன்றனர். அவர் எந்த சமரசத்துக்கும் உடன்படவில்லை. இதனால், பேச்சுவார்த்தைக்காக புதுச்சேரி வந்திருந்த மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மாநில பாஜக தலைவர் வி.பி.ராமலிங்கம், பேரவைத்தலைவர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் பாஜக தலைமையிடம் பேசுவதற்காக டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றனர்.

டெல்லியில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் ஆகியோர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ரங்கசாமியின் நிபந்தனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதனை அடுத்து, கூட்டணியில் இடம்பெறும் லட்சியஜனநாயகக் கட்சியால் எந்தப் பிரச்சினையும் வராத வகையில் பாஜக பார்த்துக் கொள்ளும் எனவும் அவர்கள் தாமரைச் சின்னத்திலேயே போட்டியிடுவார்கள் எனவும் ரங்கசாமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக இன்னும் விரிவாக பேசுவதற்காக மன்சுக் மாண்டவியா தலைமையில் டெல்லி சென்ற குழுவினர் நேற்று காலை புதுச்சேரி திரும்பினர். நேற்று பிற்பகலிலேயே இவர்கள் ரங்கசாமியை சந்தித்துப் பேசுவதாக இருந்தது ஆனால் இந்த சந்திப்பை தவிர்க்க நினைத்த ரங்கசாமி, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தரிசனத்துக்குச் செல்வதாகச் சொல்லி முன்கூட்டியே புறப்பட்டுச் சென்றுவிட்டார். மீனாட்சியம்மன் கோயில் தரிசனத்தை முடித்துக் கொண்டு அவர் திருச்செந்தூர் செல்லவிருப்பதாகவும் சொல்லப்பட்டது.

பாஜக கூட்டணிக்கு சம்மதித்துவிட்டு ரங்கசாமி ஏன் இப்படி இழுத்தடிக்கிறார் என என்.ஆர்.காங்கிரஸ் வட்டாரத்தில் விசாரித்த போது "தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வதை ரங்கசாமி விரும்பவில்லை" என்று சுருக்கமாகச் சொன்னார்கள்.

இதனால் புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி உடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால், அதிமுக, பாமக, லட்சிய ஜனநாயகக் கட்சி ஆகிய கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைக்கும் என தெரிகிறது.

அதேபோல், ரங்கசாமியும் தவெக உடன் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்திக்கலாம். “அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமை என்பதால் நேற்றைய தினம் ரங்கசாமி எந்த முடிவையும் அறிவிக்காமல் இழுத்திருக்கலாம்.

அநேகமாக இன்று அவரிடம் இருந்து முக்கிய அறிவிப்பு வெளியாகக் கூடும்” என்றும் சொல்கிறார்கள். புதுச்சேரியில் இரண்டு முக்கிய கூட்டணிகளுமே இன்னும் இறுதி வடிவம் எடுக்க முடியாமல் இழுபட்டு வரும் நிலையில், திங்கள் கிழமையுடன் இங்கே வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் முடிவுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT