புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்தித்த ராமதாஸின் மகள் காந்திமதி பரசுராமன் மற்றும் பேரன் முகுந்தன்.
புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை பாமக நிறுவனர் ராமதாஸின் மகளும், அன்புமணியின் மூத்த சகோதரியுமான காந்திமதி பரசுராமன் (பாமகவின் முன்னாள் செயல் தலைவர்)மற்றும் அவரது மகன் முகுந்தன் பரசுராமன் (பாமக இளைஞரணி முன்னாள் தலைவர்) ஆகியோர் நேற்று சந்தித்தனர். அப்போது ரங்கசாமி இருவரையும் ஆசிர்வாதம் செய்து திருநீறு பூசி வரவேற்றார்.
இதுதொடர்பாக கட்சி வட்டாரங்களில் விசாரித்தபோது, “தமிழகத்தில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியைத் தொடங்குவது குறித்து காந்திமதி, முகுந்தனிடம் ஆலோசிக்கப்பட்டது. விரைவில் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பாமகவின் பல நிர்வாகிகள் இவர்களுடன் இணைந்து என்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர உள்ளனர்” என்று தெரிவித்தனர்.
முதல்வர் ரங்கசாமியை சந்தித்தது தொடர்பாக ராமதாஸின் பேரன் முகுந்தனிடம் கேட்டதற்கு, “நாங்கள் ஐயாவை (ராமதாஸ்) சந்தித்து தெளிவாக தெரிவித்து விட்டோம். அக்கட்சிக்கு (பாமக) போகவே மாட்டோம். அவர்களுடன் பேசவும் மாட்டோம். நாங்கள் அக்குடும்பமே இல்லை என்று சொல்லிவிட்டோம். முதல்வர் ரங்கசாமி சந்திப்பு தொடர்பாக நல்ல செய்தி விரைவில் வரும்” என்றார்.
இதுபற்றி என்ஆர்.காங்கிரஸ் வட்டாரங்களில் விசாரித்த போது, “கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, நாகை, மயிலாடுதுறை மற்றும் சேலம் ஆகிய தமிழக பகுதிகளில் முதல்வர் ரங்கசாமிக்கு செல்வாக்கு உள்ளது.
இதனால் தமிழகத்தில் இப்பகுதிகளில் போட்டியிடலாம் என்ற விருப்பம் ரங்கசாமிக்கு நீண்டகாலமாக உண்டு. இதற்கிடைய தமிழக முதல்வர் விஜய்,அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோருடன் நெருங்கிய நட்பில் ரங்கசாமி உள்ளார்.
தற்போது புதுச்சேரி பாஜகவுடன் ரங்கசாமிக்கு இணக்கமான சூழல் இல்லை. இந்நிலையில் என்.ஆர். காங்கிரஸை தமிழகத்திலும் தொடங்கும் பணிகளை விரைவுபடுத்தும் திட்டமிட்டுள்ளது” என்று தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், பாமகவில் ராமதாஸ் அணியில் அதிருப்தியாக இருக்கும் சேலத்தை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ அருள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் முதல்வர் ரங்கசாமியை புதுச்சேரியில் சந்தித்து தங்களை என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டனர். முதல்வர் ரங்கசாமியின் பிறந்த நாளான ஆகஸ்ட் 4-ல் சென்னையில் பிரமாண்ட விழா நடத்த திட்டமிட்டுள்ளனர். தமிழகத்தில் என்ஆர்காங்கிரஸ் விரிவாக்கத்தை ரங்கசாமி பிறந்தநாளில் புதிய அறிவிப்பு வெளியாகவும் வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்.