சீமான் | கோப்புப்படம் 
தமிழகம்

“நலத் திட்டங்கள் அல்ல... நஷ்டங்கள்!” - இபிஎஸ் வாக்குறுதிகள் மீது சீமான் விமர்சனம்

செய்திப்பிரிவு

சென்னை: “மகளிருக்கு ரூ.2,000 வழங்கப்படும் என்று பழனிசாமி கூறுகிறார். இதனால் தமிழகத்தின் கடன் உயரும். இலவசப் பேருந்து வேண்டும் என்று யார் கேட்டது? இதற்கான பணம் எங்கிருந்து வரும்? இவையெல்லாம் நல்ல நலத் திட்டங்கள் அல்ல. நஷ்டங்கள்” என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

சென்னை கோடம்பாக்கத்தில் நடைபெற்ற ‘இடக்கரடக்கல்’ நூல் வெளியிட்டு விழாவில் சீமான் பேசியவது: “வரும் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் மக்களின் சிந்தனையில்தான் உள்ளது. தற்போது அரசியல் பெரும் லாபமீட்டும் தொழிலாக மாறிவிட்டது.

தொகுதிக்கு ரூ.20 கோடி முதலீடு செய்து, ரூ.150 கோடி வருவாய் ஈட்டலாம் என்ற எண்ணத்துடன் அரசியலுக்கு வருகின்றனர். மக்களை ஏமாற்றி தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்று கருதுவோர், பொங்கலுக்கு ரூ.3 ஆயிரம், மடிக்கணினி போன்றவற்றை வழங்குகின்றனர்.

தற்போது மக்கள் நலனுக்காக திட்டம் தீட்டும் ஆட்சியாளர்கள் இல்லை. இதை தகர்த்து, மக்கள் அரசியலை கொண்டுவர முயற்சிக்கிறோம். எங்கள் கோட்பாடு ஆள் மாற்றம், ஆட்சி மாற்றம் அல்ல. ஆட்சி முறை மாற்றம். என்னையும் ஒரு நாள் மக்கள் தேர்வு செய்வார்கள். அதற்கேற்ப, மாற்றத்தை விரும்பும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது” என்று அவர் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் கூறும்போது, “கடந்த ஆட்சியில் மகளிருக்கு ரூ.1,000 வழங்கப்பட்டது. தற்போது கூடுதலாக ரூ.1,000 கூடுதலாக வழங்கப்படும் என்று எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி கூறுகிறார். இதனால் ரூ.10 லட்சம் கோடியாக இருக்கும் தமிழகத்தின் கடன், ரூ.15 லட்சம் கோடியாக உயரும். இலவசப் பேருந்து வேண்டும் என்று யார் கேட்டது? ஏற்கெனவே போக்குவரத்து துறை ரூ.1 லட்சம் கோடி இழப்பில் சென்று கொண்டிருக்கும்போது, இதற்கான பணம் எங்கிருந்து வரும்? இவையெல்லாம் நல்ல நலத் திட்டங்கள் அல்ல. நஷ்டங்கள்.

2 சதவீத வாக்குகள் வைத்திருப்பவர்களுக்கே கூட்டணிக்கான அழைப்புகள் வரும்போது, எனக்கு வராமல் இருக்குமா? கூட்டணி வைத்ததால்தான் தேமுதிகவின் வாக்குகள் குறைந்து விட்டன. நான் வாக்குகளை இழக்கத் தயாராக இல்லை” என்று அவர் கூறினார்.

SCROLL FOR NEXT