தமிழகம்

“ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை” - மதுரையில் வைகோ தகவல்

கி.மகாராஜன்

மதுரை: ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை என மதுரையில் வைகோ கூறினார்.

போதைப்பொருள் ஒழிப்பு, சாதி, மத மோதல் தடுப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி, ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ, கடந்த 2-ம் தேதி சமத்துவ நடைபயணத்தை திருச்சியில் தொடங்கினார். நடைபயணத்தின் நிறைவு விழா திங்கட்கிழமை மாலை மதுரையில் நடக்கிறது. இந்தநிலையில், உத்தங்குடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“கூட்டணி கட்சியில் இருக்கும் பெரும்பாலான தலைவர்கள் நடைபயணத்தில் பங்கேற்று ஆதரவினை தெரிவித்தனர். போதை பொருட்களால் அதிக பாதிப்பு ஏற்படுவதாகவும், அதனை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம் என்று, நான் நடைபயணம் அறிவித்தபின்னர்தான், அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் அது குறித்து பேசினார்கள். அதுவரை அவர்கள் அது குறித்து பேசவில்லை.

அரசியலுக்கு வருவதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு. கலை உலகில் இருந்து வருபவர்களுக்கும் உரிமை உண்டு. அவர்களை நான் விமர்சிக்க மாட்டோன். அரசியலுக்கு வந்து எளிதில் சாதித்து விடாலம் என்று மணல்கோட்டை கட்டுகிறார்கள். அது எப்போது வேண்டுமானாலும், சரிந்து விழும்.

வருகிற தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றிபெறும். திமுக தனிபெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைந்து, மு.க.ஸ்டாலின் முதல்வராக தமிழகத்தை வழிநடத்துவார்.

‘ஜனநாயகன்’ திரைப்படத்தை வெளியிடுவதற்கு எல்லா உரிமையும் உள்ளது. 'சென்சார் போர்டு' எந்த காரணத்துக்காக படத்தை தடுத்து நிறுத்தி உள்ளது என்பதை அவர்கள்தான் விளக்க வேண்டும். முதலில் தடுத்தாலும், குறுகிய காலத்தில் அதனை நீக்கி கொள்வார்கள். அந்த படம் வெளிவருவதற்கு எந்த பிரச்சினையும் இருக்காது. எனக்கு சிவாஜி கணேசன், கருணாநிதியின் ‘பராசக்தி’ படம்தான் தெரியும். தற்போது வந்துள்ள ‘பராசக்தி’ பற்றி தெரியாது.

தமிழகத்துக்கு வரும், அமித்ஷா தமிழக மக்களுக்கு உபதேசம் செய்கிறார். திராவிட இயக்க பூமியில் அவரது உபதேசம் எடுபடாது. பிரதமர் மோடி தந்திரசாலி. திருக்குறள், புறநானூறு, பாரதியார் பாடல்களை இந்தியில் எழுதி வைத்து கொண்டு வாசிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தையும், தமிழக மக்களையும் கவர நினைக்கிறார். ஆனால், தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்க மறுக்கிறார்.

தமிழகத்தில், திமுக-வை துடைத்தெறிந்து விடலாம் என நினைக்கிறார்கள். இதைவிட பெரிய அடக்குமுறைகளை எல்லாம் திராவிட முன்னேற்ற கழகம் சந்தித்துள்ளது. திமுக-வை, ஒருபோதும் இந்த பூமியில் இருந்து யாராலும் அகற்ற முடியாது. அப்படி ஒரு நிலை வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் 8 ஆண்டுகளுக்கு முன்பு சிந்தித்து, திராவிட இயக்கத்தை பாதுகாக்க, திமுக-வுடன் கூட்டணி வைத்தோம். இது சித்தாந்த அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு. அதில் உறுதியாக இருக்கிறோம்.

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும், எதை பற்றி வேண்டுமானாலும் பேசலாம். அதனால், கூட்டணியிலும் பங்கு, ஆட்சியிலும் பங்கு என பேசுகிறார்கள். ஆனால், அந்த கருத்தில் எங்களுக்கு உடன்பாடில்லை. நாங்கள் அந்த மாதிரியான நிபந்தனைகளை முன்வைக்கவில்லை, வைக்கப்போவதும் இல்லை. இதற்கு பதற்றம் காரணம் இல்லை. மந்திரி சபையில் இடம் வேண்டும் என்று நானோ, எங்கள் கட்சியை சேர்ந்தவர்களோ இதுவரை கேட்டதில்லை. அவ்வாறு கூறுவதற்கு காரணம் உள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கிய பின்னர் எத்தனை தொகுதிகளில் போட்டி என்பதை அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

துரை வைகோ எம்.பி. கூறுகையில், “தலைவர் வைகோ தனது 82 வயதில், இதயமே எந்திரம் மூலம் இயங்கும் நிலையில் இந்த நடைபயணம் அறிவித்தார். இது வேண்டாம் என டாக்டர்கள் உள்ளிட்ட பலரும் அறிவுறுத்தியும் அதனை அவர் ஏற்கவில்லை. நடைபயணத்தின் ஒவ்வொரு வினாடியும் சிரமப்பட்டார். தேர்தல் அரசியலுக்காக சில சமரசங்களை அவர் செய்திருக்கலாம். ஆனால், அவரின் சுயநலத்துக்காக எந்த ஒரு சமரசத்தையும் வைகோ மேற்கொண்டதில்லை. அவரின் தொண்டு, தியாகத்தை கொச்சைப்படுத்தக்கூடாது. முன்னாள் பாஜக தலைவர்கள் வைகோவை மதிக்கிறார்கள். ஆனால், அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் போன்றவர்கள் அரசியல் வன்மத்தை வைகோ மீது வைக்கிறார்கள். இது ஏற்புடையதல்ல" என ஆவேசமாக பேசினார்.

நிறைவு விழா: திருச்சியில் தொடங்கிய இந்த சமத்துவ நடைபயணத்தின் நிறைவு விழா திங்கட்கிழமை மதுரை ஓபுளா படித்துறை அருகே பொதுக்கூட்டத்துடன் நிறைவு பெறுகிறது. பூமிநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்குகிறார். இதில், கவிபேரரசு வைரமுத்து, நடிகர் சத்யராஜ், துரை வைகோ உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். முடிவில், மதிமுக பொது செயலாளர் வைகோ ஏற்புரை நிகழ்த்துகிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT