ராமேசுவரம்: எல்லை தாண்டும் தமிழக மீனவர்களை கட்டுப்படுத்த வேண்டும் என வட மாகாண ஆளுநர் வேதநாயகன் இலங்கை கடற்படையிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இலங்கை கடற்படையின் வட மாகாண கடற்படைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ள ரியர் அட்மிரல் விஜேவர்த்தன, வட மாகாண ஆளுநர் செயலகத்தில் வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகனை சந்தித்து கலந்துரையாடினார்.
அப்போது வட மாகாண ஆளுநர் வேதநாயகன், வட மாகாண கடற்படை தளபதி விஜேவர்த்தனவிடம் தெரிவித்ததாவது: தமிழக மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடி நடவடிக்கைகள் வடக்கு மாகாண மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கும், கடல்வளப் பாதுகாப்புக்கும் தொடர்ச்சியான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, சட்டவிரோத மீன்பிடி முறைகள் கடல் வளத்தை அழிப்பதுடன், வட மாகாண மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடித் தொழிலையும் பாதித்து வருகின்றன.
இவ்வாறான நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக மீன்வளத் துறையுடன் ஒன்றிணைந்து பணிகளை துரிதப்படுத்த வேண்டும். அத்துடன், கடல் வழியாக நாட்டுக்குள் போதைப்பொருட்கள் கடத்தப்படும் முயற்சிகளை பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேலும் வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதற்குப் பதிலளித்த வட மாகாண கடற்படை தளபதி விஜேவர்த்தன, வடக்கு மாகாண மக்களின் பாதுகாப்பு, கடல் வளங்களின் பாதுகாப்பு, சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் கடற்படை முழு அர்ப்பணிப்புடன் செயல்படும் என்றார்.