சென்னை: ‘தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பாக இருக்கும். தென் மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாகவும், வடமாவட்டங்களில் இயல்பை விட குறைவாகவும், கடலோர மாவட்டங்களில் இயல்பாகவும் வடகிழக்கு பருவமழை இருக்கும்’ என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் துரை தெரிவித்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் இன்று அவர் கூறியது, “இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவமழை 21 சதவீதம் குறைந்துள்ளது. தென்மேற்கு பருவமழை 2002-ல் 45 சதவீதம் குறைவாகவும், 2016-ல் 16 சதவீதம் குறைவாகவும் இருந்தது.
தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பாக இருக்கும்.
தென் மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாகவும், வடமாவட்டங்களில் இயல்பை விட குறைவாகவும், கடலோர மாவட்டங்களில் இயல்பாகவும் வடகிழக்கு பருவமழை இருக்கும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த இரு நாட்களுக்கு மழைப்பொழிவு இருக்கும். தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் நாளை 28 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அடுத்த ஒரு வாரத்தில் வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பில்லை” என்றார்.
Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.