கனமழை காரண​மாக பழநி மலைக்​கோயிலுக்​குச் செல்​லும் படிப்​பாதையில் மழைநீர் அருவி போல் கொட்​டியது.

 
தமிழகம்

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது: தென் மாவட்டங்களில் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு

செய்திப்பிரிவு

சென்னை/ நெல்லை/ பழநி: தமிழகத்​தில் வடகிழக்குப் பருவமழை நேற்று தொடங்​கி​யுள்​ளது.

இதன் காரண​மாக தென் மாவட்​டங்​களில் கனமழை கொட்​டிய​தால் அரு​வி​களில் வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டுள்​ளது. சங்​கரன்​கோவிலில் சங்​கரநாராயண சுவாமி கோயிலுக்​குள் தண்​ணீர் புகுந்​தது.

தமிழகத்​தில் வடகிழக்குப் பரு​வ​மழை அக்​.15-ம் தேதி தொடங்​கும் என்று வானிலை மையம் அறி​வித்து இருந்​தது. அதன்​படி நேற்று வடகிழக்குப் பரு​வ​மழை தொடங்​கியது. நெல்லை, தூத்​துக்​குடி, கன்​னியாகுமரி, சிவகங்கை, திண்​டுக்​கல் உள்​ளிட்ட தென்​மாவட்​டங்​களில் நேற்று மழை கொட்​டியது.

தென்​காசி மாவட்​டம் குற்​றாலம் அரு​வி​களில் நேற்று மதி​யம் வரை தண்​ணீர் விழவில்லை. மலைப்​பகுதி​யில் நேற்று மாலை​யில் பெய்த பலத்த மழையால் குற்​றாலத்​தில் அனைத்து அரு​வி​களி​லும், மாலை 6 மணிக்​குப் பிறகு திடீர் வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டது.

இதையடுத்து, சுற்​றுலா பயணிகள் அரு​வி​களில் குளிக்க தடை​ விதிக்​கப்​பட்​டது. சங்​கரன்​கோவிலில் நேற்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை பெய்த மழையால், தாழ்​வான பகுதி​களி​லும், சாலை ​யோரங்​களி​லும் தண்​ணீர் பெருக்​கெடுத்​தது. அங்​குள்ள சங்​கர நாராயண சுவாமி கோயிலுக்​குள் தண்​ணீர் தேங்​கியது.

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலுக்குள் புகுந்த மழை நீர்.

கன்​னியாகுமரி மாவட்​டத்​தில் நேற்று மதி​யத்​துக்கு பிறகு இரண்​டரை மணி நேரத்​துக்கு மேல்கனமழை பெய்​தது. இத​னால், வெகுநாட்​களுக்​குப் பின்​னர் பேச்​சிப்​பாறை, பெருஞ்​சாணி அணைகளுக்கு 1,000 கன அடிக்கு மேல் தண்​ணீர் வந்​தது.

பாலமோர் மழைப்​பகுதி​யில் பெய்த கனமழையால் திற்​பரப்பு அரு​வியில் நேற்று மாலை திடீர் வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டது. திண்​டுக்​கல் மாவட்​டம் பழநி பகுதி​களில் நேற்று மாலை 6.30 மணிக்கு மேல் இடியுடன் தொடங்​கிய பலத்த மழை, ஒரு மணி நேரத்​துக்​கும் மேலாக நீடித்​தது. இந்த மழை காரண​மாக பழநி மலைக்​கோயிலுக்​குச் செல்லும் படிப்​பாதையில் மழைநீர் அருவி போல் கொட்​டியது.

தென்மேற்கு பருவமழை குறைவு

வடகிழக்குப் பரு​வ​மழை தொடர்​பாக செய்​தி​யாளர்​களிடம் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்​குநர் வி.ஆர். துரை நேற்று கூறிய​தாவது: நாடு முழு​வதிலும் இருந்து தென்​மேற்குப் பரு​வ​மழை 15-ம் தேதி (நேற்று) வில​கி​யுள்​ளது.

கடந்த செப்.30-ம் தேதி​யுடன் நிறைவடைந்த தென்​மேற்குப் பரு​வ​மழை காலத்​தில் 21 சதவீதம் மழை குறைவாகக் கிடைத்​துள்​ளது. தென்​மேற்குப் பரு​வ​மழைக் காலத்​தில் கடந்த 2012-ல் 23 சதவீதம், 2016-ல் 20 சதவீதம் மழை குறைவாக பெய்​துள்​ளது.

தென்​மேற்குப் பரு​வ​மழை வில​கியதைத் தொடர்ந்து தமிழகம், புதுச்​சேரி, காரைக்​கால், கடலோர ஆந்​திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்​நாடகா, கேரளம், மாஹே ஆகிய பகுதி​களில் வடகிழக்குப் பரு​வ​மழை தொடங்​கி​யுள்​ளது.

தெற்கு கடலோர தமிழகப் பகுதி​களின் மேல் சுமார் 1.5 கி.மீ. உயரம் வரை ஒரு வளிமண்​டல சுழற்சி நில​வு​கிறது. அதில் தொடங்கி மத்​திய மேற்கு, தென்​மேற்கு வங்​கக்​கடல் பகுதி​கள் வழி​யாக ஒடிசா கடலோரப் பகுதி​களுக்கு அப்​பால் உள்ள வடமேற்கு வங்​கக்​கடல் பகுதி​கள் வரை சுமார் 1.5 கி.மீ. உயரம் வரை ஒரு காற்​றழுத்த தாழ்​வுப் பாதை நில​வு​கிறது.

மிகக் கனமழை வாய்ப்பு

இதன் காரண​மாக தமிழகத்​தில் அக்.16-ம் தேதி (இன்று) நீல​கிரி, கோவை, தேனி, திண்​டுக்​கல், தென்​காசி, மதுரை மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் இடி, மின்​னல், பலத்த காற்​றுடன்கன முதல் மிகக் கனமழை பெய்​யக்​கூடும்.

ஈரோடு, திருப்​பூர், விருதுநகர், கன்​னியாகுமரி, ராம​நாத​புரம், சிவகங்கை, கரூர், அரியலூர், பெரம்​பலூர், விழுப்புரம், புதுக்​கோட்டை, திருச்சி, நாமக்​கல், தரு​மபுரி, கிருஷ்கிரி, சேலம், திரு​வண்​ணா​மலை, கள்​ளக்​குறிச்சி, விழுப்​புரம், புதுக்​கோட்டை, ராணிப்​பேட்டை, கடலூர், திரு​வள்​ளூர் மற்​றும் டெல்டா மாவட்​டங்​களான தஞ்​சாவூர், திரு​வாரூர், நாகப்​பட்​டினம், மயி​லாடு​துறை மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் கனமழை பெய்​யக்​கூடும். மற்ற மாவட்​டங்​களில் பெரும்​பாலான இடங்​களில் மித​மான மழை பெய்​யக்​கூடும்.

17-ம் தேதி (நாளை) நீல​கிரி, கோவை, தேனி, திண்​டுக்​கல், மதுரை, திருப்​பூர், சென்னை, திரு​வள்​ளூர், செங்​கல்​பட்டு, காஞ்​சிபுரம், வேலூர், ராணிப்​பேட்டை, கள்​ளக்​குறிச்சி, மயி​லாடு​துறை, நாகப்​பட்​டினம், திரு​வாரூர், தஞ்​சாவூர், கடலூர், ஈரோடு, தரு​மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ராம​நாத​புரம், திருச்சி, திருநெல்​வேலி, நாமக்​கல் மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் கனமழையும், மற்ற மாவட்​டங்​களில் பெரும்​பாலான பகுதி​களில் மித​மான மழையும் பெய்​யக்​கூடும். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT