சென்னை: தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மே 4-ம் தேதி வரை வழக்கமான வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் உயரதிகாரியும், விஞ்ஞானியுமான வி.ஆர்.துரை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை, தமிழகம் வழியாக சுமார் 0.9 கிமீ உயரத்தில் ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் இன்று முதல் மே-2-ம் தேதி வரை 3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, ஈரோடு, சேலம், நாமக்கல்,தருமபுரி கிருஷ்ணகிரி, திருச்சி ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். நாளை (மே 1) நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
மே 2-ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.
மே 3, 4, 6 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களிலும், மே 5,6 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை:
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று முதல் மே 4-ம் தேதி வரை வழக்கமான வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும்.
அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அசவுகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி முதல் 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், அசவுகரியம் ஏற்படலாம்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மே 4-ம் தேதி வரை மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்.
எனவே, இப்பகுதிகளில் மேற்படி நாட்களில், மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.