தமிழகம்

புதுச்சேரி: டிட்வா புயலால் நோணாங்குப்பம் படகு சவாரி நிறுத்தம்

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: டிட்வா புயலால் நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்றில் படகு குழாம் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளது. மேலும், படகு சவாரியும் நிறுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரியை அடுத்த நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்றில் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் படகு குழாம் செயல்பட்டு வருகிறது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சுண்ணாம்பாற்றில் பயணித்து பேரடைஸ் பீச்சுக்கு சென்று மகிழ்ந்து மீண்டும் படகில் பயணித்து வந்து படகு குழாமுக்கு திரும்புவது மறக்க முடியாத அனுபவம்.

இதனால் வாரந்தோறும் சனி, ஞாயிறு மட்டுமின்றி விடுமுறை தினங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகளவில் இருக்கும். இந்நிலையில் டிட்வா புயலால் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்றின் படுகை அணை நிரம்பி வழிவதோடு, கடலை நோக்கி தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. கடலும் ஆர்ப்பரித்து காணப்படுகிறது.

ஆகவே பாதுகாப்பு கருதி நோணாங்குப்பம் படகு குழாமில் படகு சவாரி நிறுத்தப்பட்டு, படகுகள் கரைகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக படகு இல்லமும் மூடப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை படகு குழாம் மூடப்படுவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT