தமிழகம்

மேகேதாட்டு அணை திட்டத்துக்கு அனுமதி வழங்க கூடாது: மத்திய அமைச்சரிடம் தமிழக அமைச்சர்கள் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டுவதற்கான முன்னேற்பாடுகளைக் கர்நாடக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பாக அந்த மாநில முதல்வர் டி.கே.சிவகுமாரின் சமீபத்திய பேச்சு பெரும் சர்ச்சையானது.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத் துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீலை, தமிழக நீர்வளத் துறை அமைச்சர் என்.ஆனந்த், பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோர் டெல்லியில் நேற்று சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு முன்மொழிந்துள்ள மேகேதாட்டு அணைத் திட்டம், காவிரி நடுவர் மன்றத்தின் 2007-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி வெளியிட்ட இறுதித் தீர்ப்புக்கும், உச்ச நீதிமன்றம் 2018-ம் ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி வழங்கிய தீர்ப்புக்கும் முரணானது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும்.

மேகேதாட்டு திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்ப கர்நாடக அரசு முயற்சிப்பது கவலைக்குரியது. எனவே, மேகேதாட்டு அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் திட்ட அறிக்கையை மத்திய நீர்வளத் துறை அமைச்சகமும், மத்திய நீர் ஆணையமும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள கூடாது. மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் உரிமைகள் மற்றும் கூட்டாட்சி நடைமுறைகளைப் பாதுகாக்கும் வகையில் உரிய சட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். இதுகுறித்து மத்திய நீர் ஆணையத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சருடனான சந்திப்புக்கு பின்னர் தமிழக நீர்வளத் துறை அமைச்சர் என்.ஆனந்த் கூறும்போது, “‘மேகேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடகாவின் திட்ட அறிக்கை தொடர்பாக மத்திய அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று மத்திய அமைச்சர் கூறினார். மத்திய அமைச்சருடனான பேச்சுவார்த்தை நமக்கு சாதகமாகவே இருந்தது’’ என்றார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT