தமிழகம்

எந்தச் சூழலிலும் தவெகவுக்கு ஆதரவு இல்லை: அதிமுக திட்டவட்டம்

வெற்றி மயிலோன்

சென்னை: “எந்தச் சூழ்நிலையிலும் தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது என்பதை எடப்பாடி பழனிசாமி ஒப்புதலுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, “பல ஊடகங்களில் தவெகவுக்கு அதிமுக ஆதரவளிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அது முற்றிலும் தவறான செய்தி.

எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்குப் பின்னர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக வலுவாக செயல்பட்டு வருகிறது. எந்தச் சூழ்நிலையிலும் தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது என்பதை எடப்பாடி பழனிசாமி ஒப்புதலுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தவெகவுக்கு அதிமுக ஆதரவளிக்க உள்ளதாக இன்று காலை முதல் செய்திகள் வெளியானது. இது குறித்து முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோர் எம்எல்ஏக்களிடம் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியானது.

மேலும், அவர்கள் இதுகுறித்து எடப்பாடி பழனிசாமியிடம் கருத்துகளை தெரிவித்ததாகவும் சொல்லப்பட்டது.

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில், இன்று காலை முதலே அதிமுகவின் மூத்த தலைவர்களுடன் பழனிசாமி ஆலோசனை நடத்தி வந்த நிலையில், கே.பி.முனுசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT