புதுவை சட்டப்பேரவைத் தேர்தலுக வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. ஆனால் காங்கிரஸ் - திமுக இடையே தொகுதி பங்கீடு முறைப்படி முடிவடையவில்லை.
இதையொட்டி தகுதியான தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஏ, பி பார்ம் வழங்கி, நேற்று மனு தாக்கல் செய்ய காங்கிரஸில் முடிவு செய்யப்பட்டது. காங்கிரஸ் மாநில தலைவர் வைத்திலிங்கம், தனது இல்லத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு நேற்று விண்ணப்பங்களை வழங்கினார்.
நெட்டப்பாக்கம் தொகுதியில் காங்கிரஸ் தரப்பில் அன்பரசனுக்கு சீட்டு தர படிவம் தரப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏற்கெனவே சீட்டுக்காக காத்திருந்தோர் கந்தப்பா வீதியில் உள்ள காங்கிரஸ் மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் வீட்டு முன்பாக முற்றுகை போராட்டம் நடத்தினர். வைத்திலிங்கம் ஆதரவாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஒருகட்டத்தில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. தேர்தல் விதிப்படி கூட்டம் கூடக்கூடாது என்று போலீஸார் தெரிவித்து, அங்கிருந்தவர்களை அப்புறப்படுத்தி னர். இதேபோல், முன்னாள் முதல்வர் நாராயணசாமி நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட திட்டமிட்டிருந்தார். ஆனால் அவருக்கு கட்சியில் விண்ணப்பம் வழங்கவில்லை. இதையறிந்த நாராயணசாமியின் ஆதரவாளர்கள், வைத்திலிங்கம் எம்.பி வீட்டின் முன்பு கூடினர்.
இதுபற்றி அவர்கள் கூறுகையில், "கூட்டணியில், நெல்லித்தோப்பு தொகுதியை திமுகவுக்கு ஒதுக்கி விட்டனர். கடந்த தேர்தலில் போட்டியிடாத நாராயணசாமி, இத்தேர்தலில் நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட விரும்பி, கடந்த 6 மாதங்களாக பணியாற்றி வந்தார். ‘தற்போது சீட் இல்லை’ என்று கூறி படிவம் தரவில்லை. இது எந்த வகையில் நியாயம்..?” என்று ஆவேசத்துடன் கேட்டனர்.
பின்னர் வைத்திலிங்கம் எம்.பி.யின் வீட்டு முன்பு, தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். வைத்திலிங்கத்துக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினர். காங்கிரஸ் கட்சியை திமுகவிடம் வைத்திலிங்கம் அடகு வைத்து விட்டதாகவும் குற்றம்சாட்டினர். தலைவர் பதவியிலிருந்து அவர் விலக வேண்டும் என்றும் முழக்கங்கள் எழுப்பினர். ஒரு கட்டத்தில் அவர்கள் கலைந்து சென்றனர்.
நெல்லித்தோப்பில் நாராயணசாமிக்கு படிவம் தராத நிலையில், முன்னாள் பேரவை துணைத்தலைவரும் திமுக முன்னாள் முதல்வர் ஜானகிராமனின் மருமகனான பாலனுக்கு சீட் தரப்பட்டுள்ளது. இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்த்பாபு உள்ளிட்டோரும் நெல்லித்தோப்பில் காங்கிரஸ் சார்பாக மனுத்தாக்கல் செய்துள்ளனர்.