மதுரை: லஞ்ச வழக்கில் சிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசின் முன் அனுமதி தேவையில்லை என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை சீமானூரைச் சேர்ந்த கணேசன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு: திருமயம் சட்டப்பேரவைத் தொகுதியில் தமிழக முதல்வரின் சிறு விளையாட்டு மைதானம் கட்டுவதற்கான ஆன்லைனில் டெண்டர் கோரப்பட்டது. ஆன்லைன் டெண்டரில் போலி ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆவணங்களின் உண்மை தன்மையை சரிபார்க்காமல் போலி ஆவணங்கள் வழங்கிய நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பார்த்திபன், கணக்கு அலுவலர் ராமலிங்கம், உதவி திட்ட அலுவலர் சடையப்பன், உதவி செயற்பொறியாளர் சுசீலா ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்து நீதிபதிகள் பி.வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கில் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முன் அனுமதி வழங்க மறுத்து தமிழக அரசு 25.9.2026ல் உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய விசாரணையின் போது, போலியான ஆவணங்களின் அடிப்படையில் டெண்டர் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஊழல் தடுப்புச் சட்டத்தில் முன் அனுமதி கோரப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இப்போது எந்த விசாரணையும் நடத்தாமல் அரசு முன் அனுமதி வழங்க மறுத்துள்ளது.
ஒரு பொது ஊழியருக்கு எதிராக விசாரணை அல்லது புலனாய்வு மேற்கொள்ள ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 17-ஏ-ன் கீழ் அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும். பொது ஊழியர்கள் மீது வழக்குத் தொடரப்படுவதிலிருந்து அவர்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் இப்பிரிவு சேர்க்கப்பட்டாலும், அந்தப் பிரிவில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் மட்டுமே முன் அனுமதி பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். இந்தச் சட்டப்பிரிவை அனைத்து வழக்குகளுக்கும் பொருத்திபார்க்க முடியாது.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் முன் அனுமதி பெற வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட பொது ஊழியரால் முறைகேடு தொடர்பாக ஒரு ‘முடிவு’ எடுக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது ஒரு ‘பரிந்துரை’ செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்த முடிவு, பரிந்துரை அந்தப் பொது ஊழியர் தனது அலுவல் பணிகள் அல்லது கடமைகளை நிறைவேற்றும் போது மேற்கொள்ளப்பட்டதாக இருக்க வேண்டும்.
இந்த வழக்கில் அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டு சட்டவிரோதமான பணப் பலன் கோரியதாகும். இது அலுவல் பணிகள் அல்லது கடமைகளுடன் தொடர்பில்லாத குற்றச்செயலாகும். பொது ஊழியர் தனது அலுவல் கடமைகளை நிறைவேற்றும் போது செய்த பரிந்துரை அல்லது எடுத்த முடிவு தொடர்பான சூழ்நிலைகளில் மட்டுமே முன் அனுமதி சட்டப்பிரிவு பொருந்தும்.
லஞ்சம் கோருவது அலுவல் பணிகளுடன் தொடர்புடையதல்ல. எனவே, அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஊழல் தடுப்புச் சட்டம் - 2018ன் பிரிவு 17-ஏ(1)-ன் கீழ் அனுமதி வழங்க மறுத்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அதிகாரிகள் மீது அரசின் முன் அனுமதி பெறாமலேயே ஊழல் தடுப்பு கண்காணிப்புத்துறை இயக்குனர் விசாரணை நடத்த வேண்டும். இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர், புதுக்கோட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி, காவல் ஆய்வாளர் ஆகியோர் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்படுகின்றனர். முதற்கட்ட விசாரணையை முடித்து நான்கு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை டிச. 3-க்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் தங்களின் உத்தரவில் கூறியுள்ளனர்.