புதுச்சேரி: தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் மனு தாக்கல் செய்ய இதுவரை யாரும் வராததால் எண்ணிக்கை பூஜ்யமாகவுள்ளது. இன்னும் மனு தாக்கலுக்கு இரு நாட்களே பாக்கியுள்ளது.
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த புதன்கிழமை தொடங்கியது. 3-வது நாளான இன்று வரை யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை. இத்தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி அர்ஜுன் ராமகிருஷ்ணன் இதை தெரிவித்துள்ளார்.
நாளை முதல் மூன்று நாட்களுக்கு விடுமுறை நாட்கள் என்பதால் மனு தாக்கல் இல்லை. வரும் 15 மற்றும் 16-ம் தேதிகளில் மட்டுமே மனுத் தாக்கல் செய்ய முடியும்.
இதனால் இறுதி நாளான 16-ம் தேதி ஆளும்கட்சி, எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைத்து வேட்பாளர்களும் மனுத் தாக்கல் செய்வார்கள் எனத் தெரிகிறது. 17-ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். 19-ம் தேதி வரை வேட்பு மனுக்களைத் திரும்ப பெறலாம். அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. வாக்குப்பதிவு அக்டோபர் 6-ம் தேதியும் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9-ம் தேதியும் நடக்கிறது.