அந்தரி தாஸ்

 
தமிழகம்

“திமுக ஆட்சிக்கு வருவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது!” - மதிமுக அந்தரி தாஸ் திட்டவட்டம் | நேர்காணல்

கோ.யுவராஜ்

கடந்த 2-ம் தேதி திருச்சி - மதுரை சமத்துவ நடைபயணத்தைத் தொடங்கிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இன்று (12-ம் தேதி) தனது பயணத்தை நிறைவு செய்கிறார்.

பயணத்தின் போது வழி நெடுகிலும் திமுக கூட்டணியின் வெற்றிக்காக பிரச்சாரம் செய்து வரும் அவர், “ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்” என்ற கருத்தையும் அழுத்திச் சொல்லி இருக்கிறார். இந்த நிலையில், தேர்தலுக்கான மதிமுக-வின் செயல்திட்டங்கள் குறித்து அக்கட்சியின் அரசியல் ஆய்வு மையச் செயலாளர் அந்தரி தாஸிடம் ‘ஜனநாயகத் திருவிழா’வுக்காகப் பேசினோம்.

வரும் 2026 தேர்லுக்கான மதிமுக-வின் செயல்திட்டம் என்ன?

மதிமுக தேர்தலை மட்டுமே மையமாக வைத்து இயங்கும் இயக்கம் அல்ல. காலச் சூழலுக்கு ஏற்ப பல்வேறு போராட்டக் களங்களை அமைத்து இயங்கும் இயக்கம். அந்த வகையில் திராவிட இயக்க கொள்கைகளை மேலோங்க வைக்க வேண்டும், வேற்றுமையில் ஒற்றுமை, மதச்சார்பின்மை ஆகிய கொள்கைகளை அடிப்படையாக வைத்து பயணிக்கிறோம். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தோடு மதிமுக செயல்படுகிறது.

பெரும்பாலான கட்சிகள், ‘ஆட்சி அதிகாரத்தில் பங்கு’ என்று சொல்லிக் கொண்டிருக்கையில், “நாங்கள் அப்படி எப்போதும் கேட்க மாட்டோம்” என்கிறாரே வைகோ?

மதிமுக எந்தக் காலத்திலும் ஆட்சியில் பங்கு கேட்டதில்லை; கேட்கப்போவதும் இல்லை என எங்கள் பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். வாஜ்பாய் அமைச்சரவையில் தங்கத் தட்டில் வைத்து மத்திய அமைச்சர் பதவி வழங்கிய போதே அதை நிராகரித்தவர் வைகோ. எங்கள் இயக்கத்துக்கும், தலைவருக்கும் பதவி என்பது ஒரு பொருட்டே கிடையாது. ஆட்சியில் பங்கு கேட்பது பிற கட்சிகளின் உத்தி, இது எங்களின் உத்தி.

போதைப் பொருளுக்கு எதிராக வைகோ நடைபயணம் மேற்கொள்வதற்குப் பதிலாக நேரடியாக முதல்வரைச் சந்தித்து வலியுறுத்தலாமே என்று எதிர்க்கட்சிகள் சொல்வதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

மது போதையை மட்டும் வைகோ குறிப்பிடவில்லை. அதைத் தாண்டி தற்போது கஞ்சா, அபின் போன்ற கலாச்சார சீரழிவுகள் பள்ளிக்கூடங்கள் வரை வந்துவிட்டது. கடந்த 2023-ம் ஆண்டு குஜராத்தில் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பிடிப்பட்டது. அங்கிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு கடத்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது. எங்கே ஊற்றுக்கண் இருக்கிறதோ அதை அடைக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது.

இன்றைய இளைஞர்களின் பார்வை விஜய் பக்கம் இருக்கிறது. மதிமுக-வில் இளைஞர்களை ஈர்க்க திட்டம் உள்ளதா?

வைகோ நடைபயணத்தில் 800 இளைஞர்கள் தன்னார்வலர்களாக பங்கேற்றுள்ளனர். பிரசித்திபெற்ற நடிகர் என்பதால் விஜய்க்கு இளைஞர் கூட்டம் இருக்கிறது. அதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால், அந்த இளைஞர்களை எந்தளவுக்கு அரசியல் படுத்தப் போகிறார் என்பது தெரியவில்லை. அவர்களின் பேச்சுகளில் அரசியல் தெளிவு இருப்பதாகத் தெரியவில்லை.

‘ஜனநாயகன்’ விவகாரத்தில் தணிக்கை வாரியத்தின் செயல்பாடுகளை எப்படி பார்க்கிறீர்கள்?

மத்திய அரசு தன்னாட்சி அமைப்புகளை தவறுதலாக பயன்படுத்துகிறது என்பது பல காலமாக சுட்டிக்காட்டப்படுகிறது. தன்னாட்சி அமைப்புகள் மட்டுமின்றி மத்திய அரசு அனைத்துத் துறைகளையும் தவறாகத்தான் பயன்படுத்துகிறது. தனக்கு ஆகாதவர்களை பணிய வைக்க இதனைச் செய்கிறது. இதற்கு பல உதாரணங்களைப் பார்த்துள்ளோம். விஜய்யை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்திலும் இதை அவர்கள் செய்யலாம்.

உங்கள் பார்வையில் திமுக அரசில் போதைப்பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகள், சட்டம் - ஒழுங்கு நிலவரம் எப்படி இருக்கிறது?

போதைப் பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துள்ளது. 2022-ம் ஆண்டு மிகப்பெரிய நடவடிக்கை எடுத்து 50 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்; 12 ஆயிரம் வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இருப்பினும் போதைப் பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகளை இன்னும் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.

மதிமுக-விலிருந்து விலக்கப்பட்ட மல்லை சத்யா, துரை வைகோ பாஜக-வுடன் கூட்டணி வைக்க போகிறார் என்கிறாரே?

மல்லை சத்யா மதிமுக-வில் இருந்து வெளியேறிய நாள் முதல் இதைக் கூறி வருகிறார். பாஜக-வுக்கு எதிரான கடுமையான விமர்சனங்களை மதிமுக-வும் வைக்கிறது; துரை வைகோவும் விமர்சிக்கிறார். ஆக, எங்கள் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. எங்கள் கொள்கைகளில் உறுதியாக இருக்கிறோம்.

மல்லை சத்யா திமுக கூட்டணியில் இணையப் போவதாகக் கூறுகிறாரே... அது நடந்தால் எப்படி கையாள்வீர்கள்?

திமுக மல்லை சத்யாவுக்கு எப்படி இடமளிக்க போகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. அதைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. தனிப்பட்ட முறையில் எனக்கு இதில் விருப்பமில்லை. அதற்கான சூழல் வரும் போது அதைப்பற்றி பேசலாம்.

கடந்த முறை 6 இடங்களில் போட்டியிட்ட மதிமுக, இம்முறை எத்தனை தொகுதிகளை கேட்க திட்டமிட்டுள்ளது. இம்முறையும் உதயசூரியன் சின்னத்தில் தானா அல்லது தனி சின்னத்தில் போட்டியிடுவீர்களா?

கட்சியின் அங்கீகாரத்துக்கு தேவையான இடங்களைக் கேட்போம், பொதுவாக ஒரு கட்சி அங்கீகாரம் பெற 8 சதவீத வாக்கு, 2 எம்.பி.க்கள், 8 எம்எல்ஏ-க்கள் வேண்டும். அதற்கு எத்தனை தொகுதிகள் வேண்டுமோ அதை நாங்கள் கேட்போம். கொடுப்பதும், கொடுக்காததும் அவர்களின் விருப்பம். கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையோடு இருக்கிறோம்.

விஜய் தங்கள் கூட்டணிக்கு வரவேண்டும் என பாஜக தலைவர்கள் வலியுறுத்துகின்றனர். அது நடந்தால் திமுக கூட்டணியின் வெற்றியைப் பாதிக்குமா?

மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். மத்திய பாஜக ஆட்சி எப்படி நடக்கிறது, எப்படியெல்லாம் திரிபுவாதம் செய்து கொண்டிருக்கின்றனர் என்பது அனைவருக்கும் தெரியும். எது எப்படி இருந்தாலும், எந்த சக்தியாலும் உத்தியாலும் திமுக மீண்டும் ஆட்சி அமைப்பதை தடுக்க முடியாது.

SCROLL FOR NEXT