சு.திருநாவுக்கரசர்
திருச்சி: "மீண்டும் எம்எல்ஏ அல்லது அமைச்சராக வேண்டும் என்ற ஆசை இல்லை. வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் எம்.பி.யாக வேண்டும் என்ற விருப்பம் மட்டும் உள்ளது” என காங்கிரஸ் மூத்த தலைவர் சு.திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் சு.திருநாவுக்கரசர் கூறியது: “தவெக தலைவர் விஜய் கூட்டணியில் சேருகிறாரா, தனியாக நிற்கிறாரா என்பது குறித்து இன்னும் தெளிவான தகவல் இல்லை. அதைப் பற்றி முழுமையாக தெரியாமல் கருத்து சொல்ல முடியாது. தற்போது அவர் எந்தக் கூட்டணியிலும் சேராமல் தனியாக இருப்பதாகத்தான் தெரிகிறது.
திமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்த மாற்றமும் வர வாய்ப்பு இல்லை. திமுக - காங்கிரஸ் கூட்டணி வலுவான கூட்டணி. இந்தக் கூட்டணி ஒற்றுமையாக செயல்பட்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெறும்.
கோயம்புத்தூர் போன்ற பாலியல் சம்பவங்கள் தமிழ்நாட்டில் மட்டும் அல்ல, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் நடைபெறுகின்றன. இப்படியான சம்பவங்கள் கண்டிக்கத்தக்கவை. காவல் துறை விரைவாகவும், துரிதமாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு சில சம்பவங்களை வைத்து மாநிலம் முழுவதும் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டுவிட்டது என்று கூற முடியாது.
அறந்தாங்கி தொகுதியில் தற்போது எனது மகன் ராமச்சந்திரன் எம்எல்ஏவாக உள்ளார். அந்த தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டால் அவரையே வேட்பாளராக பரிசீலிப்பார்கள் என்று நம்புகிறேன்.
நான் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை. எம்எல்ஏ அல்லது அமைச்சராக வேண்டும் என்ற ஆசையும் இல்லை. முன்பு எம்ஜிஆர் தலைமையிலான அரசிலும், பின்னர் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசிலும் அமைச்சராக இருந்துள்ளேன்.எனவே, மீண்டும் அமைச்சராக வேண்டும் என்ற விருப்பம் இல்லை. வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் எம்.பி.யாக வேண்டும் என்ற விருப்பம் மட்டும் உள்ளது” என்றார்.
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எல்.ரெக்ஸ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை பிரிவு மாநில முதன்மை துணைத் தலைவர் இன்ஜினியர் பேட்ரிக் ராஜ்குமார், புதுக்கோட்டை மாவட்ட தலைவர் பெனட் அந்தோணிராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.