கோப்புப் படம்
புது டெல்லி: “புதிய தொகுதி மறுவரையறை மசோதா தோற்கடிக்கப்பட்டால், தமிழகத்துக்கான குறைந்தபட்ச பாதுகாப்பை கூட இழந்துவிடுவோம். எனவே இந்த மசோதாவை ஆதரிப்பதை தவிர வேறு வழி இல்லை. நாடாளுமன்றத்தில் இப்போது எங்களிடம் உள்ள பலத்தை கொண்டு அடுத்த 25 ஆண்டுகளுக்கான தமிழகத்தின் அரசியல் வலிமையை பாதுகாத்துள்ளோம்” என இண்டியா கூட்டணி தலைவர்கள் சந்திப்புக்குப் பின்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இண்டியா கூட்டணி தலைவர்கள் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “ சோனியா காந்தி, ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, மல்லிகார்ஜுனா கார்கே, எம்.ஏ.பேபி உள்ளிட்ட தலைவர்கள் என்னை சந்தித்து, தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக அவர்களின் கோரிக்கைகளை எடுத்து சொன்னார்கள்.
நேற்று திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் மற்றும் தொடக்கம் முதல் நாங்கள் வைக்கும் எங்களின் கோரிக்கைகள் புதிய தொகுதி மறுவரையறை மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளதாக நாங்கள் சொன்னோம். அவர்கள் அதை ஏற்றுக்கொண்டாலும், வேறு சில பிரச்சினைகள் பற்றி பேசினார்கள்.
எங்களின் நிலைப்பாடு என்பது இப்போது இந்த மசோதா தோற்கடிக்கப்பட்டால், தமிழகத்துக்கு குறைந்தபட்ச பாதுகாப்பை கூட இழந்துவிடுவோம். அதன்பின்னர் ஜனவரி 2027ல் அமையவுள்ள தொகுதி மறுவரையறை ஆணையத்தால் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் வஞ்சிக்கப்படும். அதனை மாற்றும் அரசியல் வலிமையோ, 3ல் இரு பங்கு நாடாளுமன்ற வலிமையோ நம்மிடம் இல்லை.
1971க்கு பின்னர் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை செய்யப்பட்டாலும் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் பாதிக்கப்படும். தமிழகத்துக்கு உள்ள எம்.பிக்கள் சதவீதம் குறையும். இது தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கு வாழ்வா, சாவா போராட்டம். அதனை தடுக்க இப்போது கொண்டுவரப்படும் மசோதாவை ஆதரிப்பதை தவிர வேறு வழி இல்லை.
நாடாளுமன்றத்தில் இப்போது எங்களிடம் உள்ள பலத்தை கொண்டு அடுத்த 25 ஆண்டுகளுக்கான தமிழகத்தின் அரசியல் வலிமையை பாதுகாத்துள்ளோம். இதில் ரிஸ்க் எடுக்கவோ, உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்கவோ எந்த வாய்ப்பும் இல்லை” என தெரிவித்தார்.
முன்னதாக, இண்டியா கூட்டணி தலைவர்கள் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் மம்தா பானர்ஜி, அபிஷேக் பானர்ஜி, சிபிஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி, கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கேரள முதல்வர் வி.டி.சதீசன் உள்ளிட்ட 21 தலைவர்கள் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.
இந்த சந்திப்பின்போது தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவளிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய இண்டியா கூட்டணி தலைவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினிடம் வலியுறுத்தினர். சுமார் ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது.
மத்திய அரசு நாளை மக்களவையில் கொண்டுவரவுள்ள தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவளித்துள்ளது. அரசியலமைப்பு திருத்த மசோதாவுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படும்.
தற்போது திமுகவுக்கு 22 மக்களவை உறுப்பினர்களும், ராஜ்யசபாவில் 8 எம்.பி.க்களும் உள்ளனர். எனவே மத்திய அரசு தொகுதி மறுவரயறை மசோதாவை நிறைவேற்ற திமுகவின் ஆதரவு முக்கிய துருப்புச் சீட்டாக மாறியுள்ளது.