அரசு மருத்துவர்கள் | கோப்புப் படம்

 
தமிழகம்

‘எங்கள் நலனுக்காக எந்த ஓர் அறிவிப்பும் இதுவரை இல்லை’ - முதல்வர் மீது அரசு மருத்துவர்கள் அதிருப்தி

வெற்றி மயிலோன்

சென்னை: ‘முன்னாள் முதல்வர் கருணாநிதி அரசு மருத்துவர்களுக்காக கொண்டுவந்த அரசாணை 354-ஐ நடைமுறைப்படுத்தும் அறிவிப்பை நாளைய (பிப்.5) அமைச்சரவை கூட்டத்தில் வெளியிட வேண்டும்’ என தமிழக முதல்வருக்கு அரசு மருத்துவர்கள் சட்டப் போராட்டக் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழுவின் தலைவர் எஸ்.பெருமாள் பிள்ளை வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை (பிப்ரவரி 5) முதல்வர் தலைமையில் நடைபெற உள்ளது. இதுவரை எத்தனையோ முறை தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடந்துள்ளது. இருப்பினும் மக்கள் உயிரைக் காப்பாற்றும் அரசு மருத்துவர்கள் நலன் சார்ந்து எந்த ஓர் அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது.

          

சக மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கைக்காக போராடி, மன உளைச்சலால், மாரடைப்பால், மருத்துவர் லட்சுமி நரசிம்மன் உயிரிழந்து 7 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. ஆனால் இதுகுறித்து இன்றுவரை அரசு எதையுமே செய்யவில்லை. அதாவது சமூக நீதியை காப்பதாக அரசு தொடர்ந்து பெருமையாக தெரிவிக்கிறது. ஆனால் இந்த சமூகத்தையே உயிரோட்டமாக வைத்திருக்க, தங்கள் பங்களிப்பை வழங்கி வரும் அரசு மருத்துவர்களை தங்கள் ஊதியத்திற்காக போராட வைப்பது எந்த வகையில் நியாயம்?

தமிழக சட்டப்பேரவையில், சுகாதாரத் துறை மானியக் கோரிக்கையின் போது பேசிய, டாக்டர் எழிலன், சின்னத்துரை, சிந்தனை செல்வன் மற்றும் எம்.ஆர். காந்தி ஆகிய 4 சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு மருத்துவர்களுக்கு அரசாணை 354-ஐ நடைமுறைப்படுத்த வேண்டும் என அரசை வலியுறுத்தினார்கள். இருப்பினும் அப்போது சட்டப்பேரவையில் துறை அமைச்சர் இதுகுறித்து பதில் ஏதும் சொல்லவில்லை.

மருத்துவர்களின் நீண்டகால படிப்பு, அரசுப் பணியில் தொடர்ந்து எதிர்கொள்ளும் சவால்கள், உயிர்காக்கும் பணி, செட்டிலாவதில் தாமதம் போன்றவற்றை கருத்தில் கொண்டு, 2009-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி அரசாணை 354 ன் மூலம், அரசு மருத்துவர்களுக்கு DACP எனப்படும் காலம் சார்ந்த ஊதியம் கிடைத்திட வழி வகுத்தார். இருப்பினும் அந்த அரசாணை நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால், அதன் பலன்கள் இதுவரை அரசு மருத்துவர்களுக்கு கிடைக்கவில்லை.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட நம்முடைய சுகாதாரத் துறை கட்டமைப்பு பல மடங்கு வலுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அரசு மருத்துவர்களுக்கு தரப்படும் ஊதியம் மட்டும் 15 ஆண்டுகள் பின்தங்கி உள்ளது என்பது தான் வருத்தமான உண்மை. மற்ற மாநிலங்களில் எம்பிபிஎஸ் மருத்துவர்களுக்கு தரப்படும் ஊதியத்தை விட 40 ஆயிரம் ரூபாய் குறைவாக இங்குள்ள எம்பிபிஎஸ், சிறப்பு மற்றும் உயர் சிறப்பு மருத்துவர்களுக்கு ஊதியம் தரப்படுகிறது. இதன் மூலம் இங்கு அரசு மருத்துவர்களுக்கு எந்த அளவுக்கு அநீதி இழைக்கப்படுகிறது என்பது தெளிவாக தெரிகிறது.

மற்ற விஷயங்களில் எல்லாம் தேசிய மருத்துவ ஆணையத்தின் (NMC) வழிமுறைகளை தமிழக அரசு பின்பற்றி வருகிறது. ஆனால் நாடு முழுவதும் அரசு மருத்துவர்களுக்கு எய்ம்ஸ்க்கு இணையான ஊதியம் தரப்பட வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்திய பிறகும், தமிழக அரசு அதை இன்று வரை செயல்படுத்தவில்லை.

எனவே, வருகின்ற பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில், தமிழக முதல்வர் தன்னுடைய தந்தையின் அரசாணை 354-ன் படி, அரசு மருத்துவர்களுக்கு 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு வழங்கப்படும் என்ற வரலாற்று சிறப்புமிக்க முக்கிய அறிவிப்பை வெளியிட வேண்டும் என வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறோம். மேலும் திவ்யா விவேகானந்தனுக்கு அரசு வேலை வழங்கும் அறிவிப்பையும் வெளியிட வேண்டுகிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT