மதுரையில் நடந்த அரசு ஆய்வக நுட்புநர் சங்க விழாவில் எம்எல்ஏக்கள் வராததால் அதிருப்தி அடைந்து புறப்படத் தயாரான அமைச்சர் நிர்மல்குமார்.
மதுரை: மதுரையில் அரசு ஆய்வக நுட்புநர் சங்க விழாவுக்கு எம்எல்ஏக்கள் வராததால் அமைச்சர் நிர்மல்குமார் மேடையிலிருந்து உடனடியாக வெளியேறினார். இதன்மூலம் மதுரை மாவட்டத்தில் தவெகவில் நிலவும் கோஷ்டி பூசல் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மதுரை மருத்துவக் கழக கூட்டரங்கில் அரசு ஆய்வக நுட்புநர் சங்கம் சார்பில் வெள்ளி விழா மலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவுக்குச் சிறப்பு அழைப்பாளர்களாக மின்துறை அமைச்சர் நிர்மல்குமார், எம்எல்ஏக்கள் கோபிசன், கல்லாணை ஆகியோர் பங்கேற்பதாக அழைப்பிதழில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி நேற்று காலை 10 மணிக்கு விழா தொடங்கவிருந்த நிலையில் 10 நிமிடங்களுக்கு முன்பாகவே அமைச்சர் நிர்மல்குமார் மேடைக்கு வந்து விட்டார். ஆனால், விழா மேடையில் எம்எல்ஏக்கள் யாரும் இல்லாததால் அதிர்ச்சியடைந்தார். அதேபோன்று விழாவுக்கு குறைந்த எண்ணிக்கையிலேயே பார்வையாளர்களும் வந்திருந்தனர். இதனால் கோபமடைந்த அமைச்சர், வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கச்செல்வதாகக் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.
பாஜக, அதிமுக கட்சிகளில் பல்வேறு பொறுப்புகளை வகித்துவிட்டு தவெகவுக்கு வந்த நிர்மல்குமாருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.ஆனால், மதுரை மாவட்டத்தில் விஜய்யின் ரசிகர் மன்றம், மக்கள் இயக்கம் தொடங்கிய காலம் முதல் உறுப்பினர்களாகச் செயல்பட்ட எம்எல்ஏக்களான தங்கப்பாண்டியன், கோபிசன், கல்லாணை ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படாததால் அவர்கள் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தவெக கோஷ்டி பூசல் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.