கோப்புப் படம்
சென்னை: தமிழகத்தில் இண்டியா கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி இன்னும் ஊசலாட்டத்தில் இருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பிடிஐ-க்கு அளித்துள்ள பிரத்யேக நேர்காணலில் கூறியதாவது: தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின் வருகை தேர்தல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு எந்தளவுக்கு செல்வாக்கு இருக்கும் என்பதை தேர்தல் முடிவுகளே தீர்மானிக்கும். இருப்பினும், விஜய்யின் வருகை திமுகவை கலக்கமடையச் செய்துள்ளது என்பது வெளிப்படை.
தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம், பட்டியலினத்தவர் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. பல்கலைக்கழக வளாகங்கள் பாதுகாப்பற்ற இடங்களாக மாறி வருகின்றன. சமூக நீதி பேசும் திமுக அரசு, இந்தக் குற்றங்களைத் தடுக்கத் தவறிவிட்டது. போதைப்பொருள் மாஃபியாக்களுக்கும், அதிகார மட்டத்தில் இருப்பவர்களுக்கும் உள்ள தொடர்பு குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு கேள்விக்குறியாக தொடர்கிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இல்லாத ஒரு தேசியக் கட்சி இப்போதும் கூட்டணியை மட்டுமே நம்பி இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், திமுகவுடன் தொடர்வதா அல்லது தனித்துப் போட்டியிடுவதா என்பதில் காங்கிரஸிடம் தெளிவில்லை.
ஐந்து ஆண்டுகள் ஒன்றாகத் தேர்தலைச் சந்தித்தவர்கள், இப்போது ஏன் தயக்கம் காட்டுகிறார்கள். இது இண்டியா கூட்டணி இன்னும் வலுவாக உள்ளதா என்ற ஐயத்தை எழுப்பியுள்ளது.இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
விஜய்யுடன் பாஜக கூட்டணி வைக்குமா என்ற கேள்விக்கு, “கூட்டணிக்கு யார் வந்தாலும் வரவேற்போம். அதே சமயம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகவும் ஒற்றுமையுடன் இலக்கை நோக்கி துரிதமாக முன்னேறி வருகிறது” என அவர் கூறினார்.