மதுரை: மத்திய அரசு விழா மேடையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை அமர வைத்தது தவறான, மோசமான முன்னுதாரணம் என அமைச்சர் நிர்மல்குமார் குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து மதுரை விமான நிலைத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சென்னையில் நடைபெற்ற மத்திய அரசு விழாவில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எப்படி அமர வைக்கப்பட்டார்? இது ஒரு தவறான, மோசமான முன்னுதாரணம். எம்எல்ஏ, எம்பி அல்லாதோரை விழா மேடையில் அமர வைக்கக்கூடாது. இனிமேல், நடைபெறும் விழாக்களில் இதை தவிர்க்க வேண்டும்.
தமிழகத்தின் நலன்கனை கருதியே மத்திய அரசு விழாவில் முதல்வர் பங்கேற்றார். முகத்தை மூடிக்கொண்டு யாரையும் எங்கள் முதல்வர் பார்க்க மாட்டார். தேசிய நெடுஞ்சாலைத் திட்டம் உட்பட தமிழக வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதில் மத்திய அரசையே நம்பி இருக்கிறோம்.
இதற்காக மத்திய அரசு விழாக்களில் முதல்வர் பங்கேற்பார், தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் வெற்றியை கொண்டாடும்போது, தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வரும், அமைச்சரும் போஸ்ட் போட்டு வாழ்த்து தெரிவித்தனர். இது வழக்கமானதுதான். அங்கு யாருடைய மாப்பிள்ளையும், மகனின் நண்பர்களும் இல்லை.
கடந்த காலத்தில் திருப்பரங்குன்றத்தில் பிரச்சினை இன்றி அனைத்தும் அமைதியாக நடந்தன. பாஜக என்றைக்கு தலையிட்டதோ அன்றுமுதல் மக்களின் அமைதியைக் கெடுத்துவிட்டது. மலையில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் அமைதியாக வழிபாடு நடத்தினர். மக்களின் அமைதியை பாஜக கெடுக்க நினைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்தப் போக்கை பாஜக மாற்றிக்கொள்ள வேண்டும். மின்சாரத் தட்டுப்பாடு இருக்கிறது. இதை சரி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.