திருச்சி/ விருதுநகர்: கேரள மாநிலம் மலப்புரத்தில் லாரியில் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, திருச்சி மாவட்டம் துறையூர், விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே அகத்தாகுளத்தில் உள்ள வெடிமருந்து ஆலைகளில் கொச்சியைச் சேர்ந்த என்ஐஏ அதிகாரிகள் நேற்று விசாரணை மேற்கொண்டனர்.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் செம்மண்ட் பகுதியில் கடந்த பிப்ரவரியில் வெங்காயம் ஏற்றிச் சென்ற லாரியில் போலீஸார் சந்தேகத்தின்பேரில் நடத்திய சோதனையில் 10 ஆயிரம் ஜெலட்டின் குச்சிகள், டெடனேட்டர்கள் போன்ற வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக கொச்சியைச் சேர்ந்த தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில், கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள், தமிழகத்தில் திருச்சி, விருதுநகர், கர்நாடக மாநிலம் மிசாப்பூர் ஆகிய இடங்களில் உள்ள 3 வெடிமருந்து நிறுவனங்களில் தயாரிக்கப்பட்டவை என்பது தெரியவந்தது.
இதையடுத்து, திருச்சி மாவட்டம் துறையூர் அருகே முருங்கப்பட்டியில் செயல்பட்டு வரும் வெடிமருந்து தொழிற்சாலையிலும் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே அகத்தாகுளத்தில் உள்ள சேலம் ஸ்ரீரெங்கபாளையத்தைச் சேர்ந்த சந்தோஷ் சிவன் என்பவருக்குச் சொந்தமான வெடிமருந்து ஆலையிலும் நேற்று ஒரேநேரத்தில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.