தமிழகம்

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை

18 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம்

மோகன் கணபதி

புதுடெல்லி: விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டியில் தனியார் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 18 தொழிலாளர்கள் உயிரிழந்த விவகாரத்தை, தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.

இது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம், கட்டனார்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 18 தொழிலாளர்கள் உயிரிழந்ததாகவும், ஆறு பேர் காயமடைந்ததாகவும் வெளியான செய்தியை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.

2026 ஏப்ரல் 19 அன்று இந்தச் சம்பவம் நடந்தபோது, ​​பெண்கள் உட்பட 100-க்கும் அதிகமான தொழிலாளர்கள் அந்தத் தொழிற்சாலை வளாகத்தில் இருந்துள்ளனர். ரசாயனங்களைக் கலக்கும்போது, உற்பத்தி செய்யும் நடைமுறையின்போது ஏற்பட்ட உராய்வின் காரணமாக இந்த வெடிவிபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. அண்மையில் இதே மாவட்டத்தில் நடந்த மற்றொரு சம்பவத்தில் நான்கு பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் விருதுநகர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்களின் உடல்நிலை, வழக்கின் விசாரணை, உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் உறவினர்களுக்கு ஏதேனும் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதா என்பது போன்ற விவரங்கள் அந்த அறிக்கையில் இடம்பெற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT