செம்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பிரசவ வார்டில் இருந்த மது பாட்டில், அசைவ உணவு, நொறுக்குத் தீனிகள்.
காரைக்குடி: செம்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பிரசவ வார்டில் மது விருந்துடன் புத்தாண்டு கொண்டாட்டம் நடந்ததாக எழுந்த புகார் தொடர்பாக, சிவகங்கை மாவட்ட சுகாதார அலுவலர் விசாரணை நடத்தி வருகிறார்.
சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகேயுள்ள செம்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. இங்கு கல்லல் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். வட்டார மருத்துவ அலுவலர் உட்பட 4 மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.
இந்நிலையில், கடந்த 31-ம் தேதி நள்ளிரவில் கல்லலைச் சேர்ந்த தயாளன் (19) விபத்தில் காயமடைந்தார். அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர் அரசு, தயாளனை மீட்டு சிகிச்சைக்காக செம்பனூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றார்.
அங்கு மருத்துவர்கள், பணியாளர்கள் இல்லாத நிலையில், அரசு அவர்களைத் தேடி அவசர சிகிச்சை மற்றும் பிரசவ வார்டுக்கு சென்றார். அப்போது மருத்துவர் ஓய்வறையில் வெளிநாட்டு உயர் ரக மது பாட்டில், அசைவ உணவுகள், நொறுக்கு தீனிகள் சிதறிக் கிடந்தன.
அங்கு யாரும் இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அரசு, அவற்றை செல்போன் மூலம் வீடியோ எடுத்தார். தொடர்ந்து காயமடைந்தவரை அங்கிருந்து அழைத்துச் சென்று, தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்.
தற்போது அந்த வீடியோவை சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார். ஆரம்ப சுகாதார நிலையத்தில் மது விருந்துடன் புத்தாண்டு கொண்டாடப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், அதுகுறித்து மாவட்ட சுகாதார அலுவலர் மீனாட்சி விசாரணை நடத்தி வருகிறார்.
ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் பல மாதங்களாக இயங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து டிச. 31-ம் தேதி இரவுப் பணியில் இருந்த மருத்துவர் சசிக்குமார் கூறும்போது. “கடந்த ஓராண்டாக இங்கு பணிபுரிகிறேன்.
எனக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை. அன்று மற்றொரு கட்டிடத்தில் நான் உட்பட 3 பேர் பணியில் இருந்தோம். இரவில் சிலருக்கு சிகிச்சையும் அளித்துள்ளோம். அந்த அறையில் யாரோ வெளிநபர்கள் வந்து மது அருந்தியிருக்கலாம்” என்றார்.
ஹெச்.ராஜா கண்டனம்: பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தனது ‘எக்ஸ்’ தள பதிவில் “திமுக ஆட்சியில் பள்ளி வளாகம் தொடங்கி மருத்துவமனை வரை போதை பரவலாக்கல் தொடர்வது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின், சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் பதில் அளிப்பார்களா?” என்று பதிவிட்டுள்ளார்.
மாவட்ட சுகாதார அலுவலர் மீனாட்சி கூறும்போது, “மருத்துவர்கள், ஊழியர்கள், வீடியோ எடுத்தவர் போன்றவர்களிடம் முழுமையாக விசாரித்த பின்னரே, என்ன நடந்தது என்பது தெரியவரும்" என்றார்.